

மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்த பெண் ஒருவர் மேட்ரிமோனி இணையதளத்தின் மூலம் மணமகன் தேடி வந்துள்ளார். கடந்த மாதம் மேட்ரிமோனியில் ஒருவரின் புரோஃபைல் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அவரிடம் பேசி மிகவும் நெருக்கமாகி உள்ளார். அந்த நபர் தான் வெளிநாட்டில் இருப்பதாகவும் விரைவில் இந்தியா வரப்போவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து சில நாட்களுக்கு பின்னர் புதுடெல்லி வந்து விட்டேன். அதனால் இந்திய ரூபாய் தேவைப்படுகிறது என கேட்டுள்ளார். அப்பெண்ணும் அவர் கொடுத்த வங்கிக் கணக்கில் 1.57 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். அதன் பிறகு அந்த வாலிபரை போனில் தொடர்பு கொண்ட போது அவர் போனை எடுக்கவில்லை.
இதுகுறித்து அந்த பெண் தானே போலீசிடம் புகார் அளித்தார். போலீஸ் நடத்திய விசாரணையில் அந்த நபர் நைஜீரியாவைச் சேர்ந்தவர் என்ற உண்மை தெரிய வந்தது.
கடந்த திங்கட்கிழமை டெல்லியில் வைத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். அவரிடமிருந்த பொருட்கள் மற்றும் பணத்தை கைப்பற்றினர். வாலிபர் இது போன்று இரண்டு பெண்களை ஏமாற்றியுள்ளான். அவனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 18-ம் தேதி வரை அவனை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.