நைஜீரியாவில் பள்ளி மாணவிகள் 110 பேர் கடத்தல்

நைஜீரியாவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 110 மாணவிகளை துப்பாக்கி முனையில் போகோஹரம் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
நைஜீரியாவில் பள்ளி மாணவிகள் 110 பேர் கடத்தல்
Published on

அபுஜா:

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்கள் அங்கு அப்பாவி மக்களை குறிவைத்து அதிபயங்கர தாக்குதல்களை நடத்தி அவர்களை கொன்று குவித்து வருகின்றனர்.

மேலும் இவர்கள் பள்ளி மாணவ-மாணவிகளை கடத்திச் சென்று, அவர்களை தற்கொலைப்படை தாக்குதல்களுக்கு பயன்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டு உள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு போர்னோ மாகாணம் சிபோக் நகரில் இருந்து 276 பள்ளி மாணவிகளை போகோஹரம் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். இவர்களில் பலர் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்தனர். இருப்பினும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளின் கதி என்ன என்பது இன்று வரை தெரியவில்லை.

சிபோக் நகரில் இருந்து 275 கி.மீ தொலைவில், யோப் மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்து உள்ள நகரம் தாப்சி. இந்த நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை கடந்த வாரம் போகோஹரம் பயங்கரவாதிகள் சூறையாடினர். 110 மாணவிகளை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.

தாப்சி நகரின் எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் கடந்த மாதம் தங்களின் முகாம்களுக்கு திரும்பி சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனை பயன்படுத்தி பயங்கரவாதிகள் அந்த நகருக்குள் நுழைந்து, பள்ளி மாணவிகளை கடத்திச் சென்றுவிட்டனர்.

பயங்கரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் ராணுவ விமானங்களில் தாப்சி நகருக்கு திரும்பினர். அங்கு கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு கடத்தப்பட்ட மாணவிகளை மீட்பதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com