புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்களை கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண்களை கிண்டல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று சென்னை மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்களை கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை
Published on

சென்னை:

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2018-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடைபெறுவதற்கு சென்னை காவல் துறை அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளது. முக்கியமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 3 ஆயிரத்து 500 காவலர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க சென்னை காவல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

31-ந்தேதி (ஞாயிறுக்கிழமை) இரவு 9 மணியிலிருந்து முக்கியமான இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, புனித தோமையர் மலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், அம்பத்தூர், அண்ணா நகர் மற்றும் புளியந்தோப்பு உள்ளிட்ட 368 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சென்னையில் கடந்த ஆண்டு இரவு 9 மணிமுதல் அதிகாலை 3 மணி வரை 30 சாலை விபத்துகள் நடந்தன. அதில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு அவ்வாறு ஏற்படாமல் இருக்க விபத்துகள் அதிகம் ஏற்படக் கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வேண்டிய உதவிகளை மேற்கொள்வார்கள். இது மட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம் போன்ற பகுதிகளில் இருசக்கர வாகன பந்தயத்தை தடுக்க 20 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 100 முக்கிய கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுதளங்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை ஆகிய கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் பயன்படுத்தப்படும். மணல் பகுதியில் போலீஸ் உதவி மைய கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படும். மெரினா சாந்தோம் பகுதிகளிலும், காமராஜர் சாலையிலும் இது போன்று உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்படும்.

குற்றத் தடுப்பு நடவடிக்கை மற்றும் கிண்டல் செய்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் ஆகிய பணிகளுக்கு நடமாடும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு நவீன ரக வாகனங்களில், நவீன விளக்குகள் பொருத்தி மக்கள் அதிகம் கூடும் மற்றும் வாகனங்கள் அதிகம் சேரும் இடங் களில் உபயோகிக்கப்படும்.

கடற்கரை மட்டுமில்லாமல் சென்னையில் உள்ள அனைத்து இடங்களிலும் ஒரு காவல் நிலையத்திற்கு 5 லிருந்து 10 ரோந்து வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. பெண்களை கிண்டல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை காவல் துறை அரசு உத்தரவின் பேரில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து சென்னை மாநகர மக்கள் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாகவும், மற்றவர்களுக்கு சிரமமின்றி அமையவும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com