ஆவடி அருகே திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் மர்ம மரணம்

திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
மதுஸ்ரீ
மதுஸ்ரீ
Published on

ஆவடி:

ஆவடியை அடுத்த பட்டாபிராம், அணைக்கட்டுச்சேரி பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 30). இவர், திருவேற்காடு பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக உள்ளார். இவருடைய மனைவி மதுஸ்ரீ (22). இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது.

நேற்று முன்தினம் மாலை வீட்டின் மாடிக்கு சென்ற மதுஸ்ரீ, நீண்டநேரம் ஆகியும் கீழே இறங்கி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விக்னேஸ்வரன், மாடிக்கு சென்று பார்த்தார். அங்கு மதுஸ்ரீ மயங்கி விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஸ்வரன், மதுஸ்ரீயை மீட்டு ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மதுஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுபற்றி மதுஸ்ரீயின் தந்தையான திருவள்ளூர் மாவட்டம் போலிவாக்கம் அடுத்த தொடுகாடு பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி மேருநாதனுக்கு விக்னேஸ்வரன் போனில் தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த பட்டாபிராம் போலீசார், மதுஸ்ரீ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுஸ்ரீயின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் அவரது மர்ம சாவுக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மதுஸ்ரீக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் இதுபற்றி திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com