85 வயதிலும் சுறுசுறுப்பு- ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு குவியும் பாராட்டுகள்

கோவையில் தள்ளாத வயதிலும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி வரும் மூதாட்டிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
விறகு அடுப்பில் சுட, சுட இட்லி செய்யும் கமலாத்தாள் பாட்டி.
விறகு அடுப்பில் சுட, சுட இட்லி செய்யும் கமலாத்தாள் பாட்டி.
Published on

தென்னிந்தியா உணவு வகைகளில் இட்லி முக்கிய உணவாகும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை நோயாளிகள் என அனைவருக்கும் ஏற்ற உணவாக இட்லி விளங்கி வருகிறது. விலைவாசி உயர்வால் ஒரு இட்லி குறைந்தது ரூ.6 முதல் ஸ்டார் ஓட்டல்களில் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் அவரவர் வசதிக்கேற்றாற்போல் இட்லிகளை வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள். காலை மற்றும் இரவு உணவில் இட்லி பயன்பாடு அதிகமாக இருக்கும். இந்த நிலையில் உயர்ந்து வரும் விலைவாசியும் பொருட்படுத்தாமல் 85 வயதான ஒரு மூதாட்டி எந்தவொரு லாபம் நோக்கமும் இல்லாமல் ஒரு இட்லி ரூ.1-க்கு விற்பனை செய்து வருகிறார்.

காலை நேரத்தில் பெரிய, பெரிய ஓட்டல்களை மிஞ்சும் அளவுக்கு இந்த 1 ரூபாய் இட்லி பாட்டியின் கடையில் கூட்டம் அலைமோதுகிறது. இதுபற்றிய விவரம் வருமாறு,

கோவை ஆலாந்துறையை அடுத்த வடிவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள். 85 வயதான இவர் தினந்தோறும் அதிகாலை 4 மணியளவில் எழுந்து தனது வீட்டு வேலைகளை செய்து விட்டு பின்னர் தான் நடத்தி வரும் இட்லி கடையை தொடங்கி விடுகிறார். யாருடைய உதவியும் இல்லாமல் தனி ஆளாக இட்லி, சட்னி, சாம்பார் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இட்லி வியாபாரத்தை தொடங்கிய மூதாட்டி ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்று வந்தார். பின்னர் விலைவாசி உயர்வால் படிப்படியாக உயர்ந்து தற்போது ஒரு இட்லி ரூ.1-க்கு விற்று வருகிறார். கடந்த 30 ஆண்டுகளில் ஒரு இட்லிக்கு 75 பைசா மட்டுமே விலை உயர்த்தியுள்ளது.

இதனால் 1 ரூபாய் இட்லி வாங்க காலையிலேயே கமலாத்தாள் பாட்டி கடையில் கூட்டம் அலைமோதுகிறது. தள்ளாத வயதிலும் கூன்விழுந்த முதுகோடு அடுப்பு தீ மூட்டி புகையின் நடுவே ஆவி பறக்க, பறக்க பாட்டி கமலாத்தாள் சுறுசுறுப்பாக இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது கடைக்கு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், அரசு, தனியார் நிறுவனங்களுக்கு செல்வோர் தினமும் வந்து இட்லி வாங்கி செல்கிறார்கள். கமலாத்தாள் பாட்டியை சுற்றுப்புற கிராமங்களில் 1 ரூபாய் இட்லி பாட்டி என்று சொல்லும் அளவுக்கு பிரபலமாகி விட்டார்.

இவர் இட்லி மாவு தயாரிக்க கிரைண்டர் பயன்படுத்துவது இல்லை. மேலும் சட்னி, சாம்பார் வைக்க மிக்சி பயன்படுத்துவது இல்லை. தனது கையாலே இட்லி மாவு தயாரித்தும், ஆட்டுக்கல்லில் அரைத்து சட்னி, சாம்பார் செய்வதால் இவரது இட்லிக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக மாறி விட்டனர்.

இது குறித்து பாட்டி கமலாத்தாளிடம் கேட்ட போது கூறியதாவது, நான் கடந்த 30 ஆண்டுகளாக இட்லி வியாபாரம் செய்து வருகிறேன். ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்றேன். கடந்த 10 ஆண்டுகளாக ஒரு இட்லி ரூ.1-க்கு விற்று வருகிறேன். என்னை நம்பி வரக்கூடிய பள்ளி குழந்தைகள், கூலி தொழிலாளர்கள் ஏமாறக்கூடாது என்பதற்காகவே இந்த வயதிலும் நான் இட்லி வியாபாரம் செய்து வருகிறேன். மாவு, சட்னி, சாம்பாருக்கு தேவையானவற்றை ஆட்டுக்கல்லில் நானே அரைத்து பக்குவமாக சுவையாக தருவதால் என்னை நாடி ஏராளமானோர் வருகிறார்கள். மேலும் பூலுவப்பட்டி சந்தைக்கு வருவோர் இங்கு வந்து இட்லி சாப்பிடாமல் செல்லமாட்டார்கள். என்னை அனைவரும் 1 ரூபாய் இட்லி பாட்டி என்று அன்பாக அழைக்கிறார்கள். மக்கள் மனதில் இடம் கிடைத்தால் போதும். காசு, பணம் தேவையில்லை என்றார். 1 ரூபாய் இட்லி பாட்டி பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் அவரது கடைக்கு இட்லி சாப்பிட நாளுக்கு, நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் பாட்டியை பாராட்டி ஏராளமான பேர் பதிவிட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com