நேபாளம்: நில அதிர்வுக்கு இடையே வாக்கு எண்ணிக்கை - இடதுசாரி கூட்டணி முன்னிலை
காத்மண்டு:
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு புதிய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து, பாராளுமன்றம் மற்றும் 7 மாகாண சபைகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த மாதம் 26-ம் தேதி 32 மாவட்டங்களை உள்ளடக்கிய 37 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 74 மாகாண சபை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இந்நிலையில், இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது.
45 மாவட்டங்களை உள்ளடக்கிய 128 பாராளுமன்ற தொகுதி மற்றும் 256 மாகாண உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலில் வரலாற்று சாதனையாக 67 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. தேர்தல் முடிந்ததும் வாக்கு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டன.
அனைத்து வாக்குபெட்டிகளும் வந்தடைந்த பின்னர் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. தொடக்கம் முதலே நேபாள கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. மூன்று பாராளுமன்ற தொகுதிகளில் அக்கூட்டணி வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், யார் மகுடம் சூட்டப்போகிறார்கள்? என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, இன்று காலை நேபாளத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5 ஆக பதிவாகியுள்ள இந்த நில அதிர்வால் மக்கள் பீதி அடைந்தனர்.
