

திருப்பதி:
ஆந்திராவில் தியேட்டர்களில் அதிகமாக இருந்த டிக்கெட் கட்டணத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக குறைத்தார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கான வசூலும் பாதிக்கப்பட்டது.
இதனால் நஷ்டம் ஏற்படுவதாக தியேட்டர் உரிமையாளர்களும், சினிமா தயாரிப்பாளர்களும், நடிகர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
டிக்கெட் கட்டணத்தை உயர்த்தக்கோரி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ்பாபு, பிரபாஸ், இயக்குனர்கள் ராஜமவுலி கொரட்டாலா சிவா உள்பட தெலுங்கு திரையுலகினர் சந்தித்து தியேட்டகளின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த கோரிக்கை வைத்தனர்.
தெலுங்கு திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று நேற்று முதல் தியேட்டர் கட்டணத்தை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்களில் ரூ.125 கட்டணமும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரூ.150 கட்டணமும் வசூலிக்கப்படும். இத்துடன் ஜி.எஸ்.டி. வரியையும் சேர்த்து வசூலிக்கப்படும். நகர்ப்புற தியேட்டர்களில் மட்டுமின்றி கிராமப்புற தியேட்டர்களிலும் இந்த மாற்றம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் பட்ஜெட் ரூ. 100 கோடிக்கு மேல் இருந்தால் டிக்கெட் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. அந்தப் படங்களின் 20 சதவீத படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்திருக்க வேண்டும் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம், ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர்., மகேஷ்பாபு நடித்த சர்க்காரு வாரி பட்டா உள்பட சில படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் தியேட்டர்களில் டிக்கெட் விலை உயர்ந்துள்ளதால் திரையுலகினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே வேளையில் தியேட்டர் டிக்கெட் கட்டண உயர்வால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.