

அமெரிக்கா- ஈரான் இடையில் கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கியது. இதனால் உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் சப்ளை கடும் பாதிப்பை சந்தித்தது. கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் பேரல் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இது உலக பொருளாதாரத்தை வெகுவாக பாதித்தது.
அமெரிக்கா- ஈரான் இடையிலான சண்டை காரணமாக பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வந்தன. சுமார் 40 நாட்களுக்குப் பிறகு இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருந்ததால், எண்ணெய் போக்குவரத்தை பாதித்த வண்ணமே இருந்தது.
இந்த நிலையில்தான் கடந்த வாரம் இறுதியில் அமெரிக்கா- ஈரான் இடையிலான நிரந்தர போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. வருகிற 19-ந்தேதி (நாளை மறுதினம்) சுவிட்சர்லாந்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என டிரம்ப் அறிவித்தார். இதனால் கச்சா எண்ணெய் விலை குறைந்த வண்ணம் உள்ளது.
இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை, மும்பை பங்குச் சந்தைகள் கடந்த சில தினங்களாக ஏற்றம் கண்டு வந்தன. இந்த நிலையில் இன்று 4-வது நாளாக பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் அதிகபட்சமாக 410.51 புள்ளிகள் உயர்ந்தன. இறுதியாக 347.14 புள்ளிகள் உயர்ந்து 77155.62 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் 0.45 சதவீதம் உயர்வு காணப்பட்டது.
அதேபோல் இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி 96.55 (0.40 சதவீதம்) உயர்ந்து 24,085.70 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவநடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் அதிகபட்சமாக 119.05 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்பட்டது.