

மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியில் மீண்டும் ஒரு பெரிய பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தவ் தாக்கரே சிவசேனாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க தலா 15 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி-யுமான சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.
ரூ. 15 கோடி பேரம் மற்றும் பிரைவேட் ஜெட் சர்ச்சை..
சஞ்சய் ராவத் தனது 'X' பக்கத்தில், "மகாராஷ்டிர எம்.பி-க்களை விலைக்கு வாங்குவதற்காக, முன்பணமாக தலா 15 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், கட்சியில் இருந்து பிரிய நினைக்கும் இரண்டு எம்.பி-க்களை அழைத்து வர நான்டெட் விமான நிலையத்திற்கு ஒரு தனி ரகசிய விமானம் அனுப்பப்பட்டதாகவும் இன்று காலை குற்றம் சாட்டியுள்ளார்.
"ஒரு காலத்தில் ஆட்டோ ரிக்ஷாவில் கூட செல்ல முடியாதவர்களை, இன்று தாக்கரே என்ற பெயர் தான் தனி விமானத்தில் செல்லும் அளவிற்கு உயர்த்தியது" என அதிருப்தி தெரிவித்துள்ளார்.
6 எம்.பி-க்கள் அதிருப்தி?
அரசியல் வட்டாரத் தகவல்களின்படி, உத்தவ் சிவசேனாவைச் சேர்ந்த 6 முக்கிய எம்.பிக்கள் தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆளும் சிவசேனாவுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் இன்று லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து, தங்களைத் தனி குழுவாக அங்கீகரிக்கக் கோரி கடிதம் வழங்க வாய்ப்புள்ளதாகவும், பின்னர் ஷிண்டே பிரிவோடு இணைய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
உத்தவ் தாக்கரேவின் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கை..
கட்சி உடைவதைத் தடுக்கும் நோக்கில், உத்தவ் தாக்கரே தரப்பு டெல்லியில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
நாளை காலை 11 மணிக்கு டெல்லியில் நடைபெறும் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அனைத்து எம்.பி-க்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்காத எம்.பி-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க உத்தவ் தரப்பு ஆலோசித்து வருகிறது.