

இந்தியாவின் அன்னியச் செலாவணி இருப்பை வலுப்படுத்தவும், உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்தவும் இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் மேற்கொள்ளும் குறிப்பிட்ட கால அளவிலான FCNR(B) மற்றும் NRE டெபாசிட்களுக்கான வட்டி விகித உச்சவரம்பை ஆர்பிஐ தற்காலிகமாக நீக்கியுள்ளது. வங்கிகள் வெளிநாட்டுப் பணத்தை அதிகளவில் ஈர்ப்பதற்கு ஏதுவாக இந்த தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான முதிர்வுக் காலம் கொண்ட புதிய மற்றும் புதுப்பிக்கப்படும் FCNR(B) டெபாசிட்களுக்கான வட்டி விகித உச்சவரம்பு முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
இது வெளிநாட்டில் ஈட்டும் வருமானத்தை இந்தியாவிற்கு அனுப்பப் பயன்படும் கணக்கு. இதில் உள்ள பணத்திற்கு இந்தியாவில் வரி கிடையாது. 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட முதிர்வுக் காலம் கொண்ட புதிய மற்றும் புதுப்பிக்கப்படும் NRE டெபாசிட்களுக்கு, வழக்கமான உள்நாட்டு டெபாசிட்களை விட கூடுதல் வட்டி வழங்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் வாடகை, பங்குகள் அல்லது பென்ஷன் மூலம் கிடைக்கும் வருமானத்தை நிர்வகிக்கப் பயன்படும் கணக்கு. இதற்கு இந்திய அரசு விதிமுறைப்படி வரி விதிக்கப்படும்.
இந்த சிறப்புத் தளர்வு செப்டம்பர் 30, 2026 வரை மட்டுமே அமலில் இருக்கும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. NRO கணக்குகளிலிருந்து NRE கணக்குகளுக்கு மாற்றப்படும் நிதிகளுக்கு இந்த வட்டி விதிவிலக்கு பொருந்தாது என்று மத்திய வங்கி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
வழக்கமாக, வங்கிகள் தங்களுக்குத் தோன்றும் வட்டி விகிதங்களை NRI கணக்குகளுக்கு வழங்க முடியாது. அதற்கு ஆர்பிஐ-யின் சில கட்டுப்பாடுகள் மற்றும் சர்வதேச வட்டி விகித குறியீடுகள் அடிப்படையிலான உச்சவரம்புகள் இருக்கும். ஆனால் தற்போது இந்த உச்சவரம்புகள் நீக்கப்பட்டுள்ளதால், இந்திய வங்கிகள் வெளிநாடு வாழ் இந்தியர்களைக் கவர 8% அல்லது அதற்கு இணையான அதிக வட்டி விகிதங்களை ஆஃபர் செய்ய வழிவகை பிறந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் FCNR டெபாசிட்களுக்கான ஹெட்ஜிங் செலவுகளை (நாணய மதிப்பு மாறுபாட்டிற்கான காப்பீட்டுச் செலவு) தானே ஏற்பதாக ஆர்பிஐ அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது வட்டி உச்சவரம்பையும் நீக்கியிருப்பது வங்கிகளுக்கு மிகப்பெரிய நிம்மதியைத் தந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் அன்னியச் செலாவணி சந்தைக்குள் பல பில்லியன் டாலர் மதிப்பிலான வெளிநாட்டு முதலீடுகள் குவியும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.