

தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, கடந்த மூன்று மாதங்களாக ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் தேசிய சமூக நல உதவித் திட்டத்தின் கீழ் உள்ள 1.49 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் தங்களது மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறவில்லை.
இத்திட்டத்தின் கீழ், முதியோர், விதவை மற்றும் மாற்றுத்திறனாளி ஓய்வூதியதாரர்கள் மாதம் ரூ.1,000-ம், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 80 சதவீதத்திற்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் மாதம் ரூ.3,500-ம் பெறுகின்றனர்.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக முதியோர் ஓய்வூதியம் கிடைக்காததால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக மூதாட்டி ஒருவர் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டதால் உயிரிழந்தார்.
அவர் சதேயபடா கிராமத்தைச் சேர்ந்த 66 வயதான விதவை பி. சாவித்ரி டோரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர், தனது மூன்று மகள்களின் திருமணத்திற்குப் பிறகு வீட்டில் தனியாகவே வசித்து வந்துள்ளார்.
மேலும் மாத ஓய்வூதியமான 1,000 ரூபாயையும், உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் 5 கிலோ அரிசியையும் முழுமையாகச் சார்ந்தே தனது அன்றாட வாழ்க்கையை நடத்திவந்துள்ளார்.
இந்நிலையில் ஓய்வூதியத் தொகை வரவு வைக்கப்பட்டுவிட்டதா என்பதைச் சரிபார்ப்பதற்காக மீண்டும் மீண்டும் அவர் வங்கிக்கு சென்று வந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
இதன் காரணமாக மிகவும் மனவுளைச்சலுக்கு ஆளாகி பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு இறந்துவிட்டதாக அவரது மகள் குற்றம் சாட்டினார்.
இத்துடன் அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் சுனில் குமார் சமந்த் சம்பவ இடத்திற்கு விரைந்தார். மேலும் அந்த மூதாட்டியை பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்.
இந்நிலையில், இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாகவும், அது விரைவில் சரிசெய்யப்படும் என்றும் பள்ளி மற்றும் மக்கள் கல்வி, பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலத்துறை அமைச்சர் நித்யானந்த கோண்ட் கூறினார்.