search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரண்மனை வளாகத்தில் தசரா யானைகள் ஒத்திகையில் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.
    X
    அரண்மனை வளாகத்தில் தசரா யானைகள் ஒத்திகையில் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

    மைசூருவில் இன்று தசரா ஊர்வலம்: பசவராஜ்பொம்மை தொடங்கி வைக்கிறார்

    மைசூரு தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான தசரா ஊர்வலத்தை இன்று (வெள்ளிக்கிழமை) முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தொடங்கிவைக்கிறார். இதில் கொரோனா பரவலால் 400 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    மைசூரு :

    கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெறும் தசரா விழா உலக புகழ் பெற்றது.

    இது நவராத்திரி மற்றும் விஜயதசமியையொட்டி 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் விழாவாகும். தசரா விழா நன்மைக்கும், தீமைக்கும் நடைபெறும் போட்டியாக கருதப்படுகிறது. கர்நாடக காவல் தெய்வமாக கருதப்படும் மைசூரு சாமுண்டி மலையில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மன், மகிஷாசூரனை வதம் செய்த நாள்தான் விஜயதசமி நாளாகவும், தசரா விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    மேலும் மைசூருவை ஆண்ட மன்னர் ஒருவர் போரில் வெற்றிபெற்ற நாள் தான் மைசூரு தசரா விழாவாக கொண்டாடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த 1610-ம் ஆண்டு விஜயநகர பேரரசு ஆட்சி காலத்தில் மன்னர் நால்வடிராஜா உடையாரால் ஸ்ரீரங்கப்பட்டணாவில் மகாநவமியையொட்டி தசரா விழா கொண்டாடப்பட்டது. அதன்பின்னர் மைசூருவை ஆட்சி செய்த யது வம்ச மன்னர்களால் தசரா விழா நடத்தப்பட்டு வந்தது. தற்போது மைசூரு தசரா விழா கர்நாடக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    தற்போது கொண்டாடப்படும் தசரா விழா 411-வது தசரா விழா ஆகும். இந்த ஆண்டு தசரா விழா அக்டோபர் மாதம் 7-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தசரா விழா இம்மாதம் கடந்த 7-ந் தேதி திட்டமிட்டபடி மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு விழாவை முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா தொடங்கி வைத்தார். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் தசரா விழா எளிமையாக கொண்டாடப்பட்டது.

    ஏராளமான கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. மைசூரு அரண்மனையில் மட்டும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பிடத்தக்க கலைஞர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும் பார்வையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இதனால் கொரோனா விதிகளை பின்பற்றி தசரா விழா கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    இதுஒருபுறம் இருக்க மைசூரு அரண்மனையில் தசரா விழாவையொட்டி நடைபெறும் பாரம்பரிய நிகழ்ச்சிகள், பூஜைகள், சம்பிரதாயங்கள் ஆகியவை வழக்கம்போல் நடந்தன. குறிப்பாக தங்க, வைர, நவரத்தினங்களால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்து இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்தினார். விழாவின் 8-ம் நாளில் மைசூரு அரண்மனையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதேபோல் நவராத்திரியையொட்டி அரண்மனையில் வைக்கப்பட்டிருந்த கொலுவுக்கும் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.

    அதில் ராஜ உடையில் இளவரசர் யதுவீர், ராணி பிரமோதாதேவி மற்றும் குறிப்பிடத்தக்க பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று(வெள்ளிக்கிழமை) காலையில் அரண்மனையில் பாரம்பரியப்படி பல்வேறு பூஜைகள் நடக்கிறது. பின்னர் அரண்மனை வளாகத்தில் உள்ள பிரத்யேக தளத்தில் கத்திபோடும் மல்யுத்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மொட்டை தலையுடன் இரு வீரர்கள் பங்கேற்பார்கள். இருவரின் கைகளிலும் கூர்மையான கத்தி இருக்கும். அதில் ஒருவரின் தலையில் அந்த கத்தியால் குத்தி ரத்தம் சிந்தினால் போட்டி நிறுத்தப்பட்டு, தசரா ஊர்வல ஏற்பாடு தொடங்கப்படும்.

    அதையடுத்து இளவரசர் யதுவீர் அரண்மனை வளாகத்தில் உள்ள பன்னிமரத்திற்கு பூஜை செய்து அதை வெட்டுவார். பின்னர் அரண்மனை வளாகத்தில் சரியாக மதியம் 3.40 மணிக்கு கும்ப லக்கனத்தில் ஜம்பு சவாரி ஊர்வலம் தொடங்குகிறது.

    ஊர்வலத்தை அரண்மனை முன்பு வைத்து பிரத்யேக மேடையில் ஏறி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கிவைக்கிறார். இதில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரிகள் சோமசேகர், ஆர்.அசோக், சோமண்ணா, இளவரசர் யதுவீர் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    அப்போது அபிமன்யு யானை சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து கொண்டு யானைகள் புடை சூழ வீறுநடை போட்டு கம்பீரமாக வரும். அதற்கு முன்பு குதிரைப்படை, ஒட்டகப்படை, போலீசார் அணிவகுப்பு, போலீஸ் இசைக்குழுவினரின் அணிவகுப்பு, கலைஞர்களின் ஆடல்-பாடல் ஊர்வலம், பீரங்கி முழக்கம், பட்டாசுகள் வெடிப்பது போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும்.

    இந்த ஆண்டும் ஜம்பு சவாரி ஊர்வலம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மைசூரு அரண்மனை வளாகத்திலேயே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. ஊர்வலத்தில் 500 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. அவர்களும் குறைந்தது ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும் என்றும், 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

    இந்த ஆண்டு தசரா ஊர்வலத்தில் 6 யானைகள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊர்வலத்தையொட்டி மைசூரு அரண்மனையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
    Next Story
    ×