

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் சம்பூர்ணம் (வயது 80). இவரது கணவர் இறந்து விட்டார்.
இதனால் சம்பூர்ணம், கூலி வேலைக்கு சென்று, அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வந்தார். வயது முதிர்வு காரணமாக கடந்த சில வருடங்களாக வேலைக்கு செல்ல முடியவில்லை.
இதனை தொடர்ந்து மகன்கள், சம்பூர்ணத்தை கவனிக்கவில்லை. அவர் தனித்து விடப்பட்டார். இதனால் உணவுக்கு வழியில்லாமல் தவித்து வந்தார்.
இந்த நிலையில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. நடக்க முடியாமல் அவதிப்பட்டு வரும் அவருக்கு அக்கம், பக்கத்தினர் உணவு அளித்து பராமரித்து வந்தனர்.
மேலும், மூதாட்டியை மகன்களிடம் ஒப்படைக்க முயன்றபோது மூத்த மகன், தாய் என்றும் பாராமல் விஷ ஊசி போட்டு அவரை கொல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் தனியார் தொண்டு நிறுவனத்தினர் மற்றும் பள்ளிப்பாளையம் போலீசார் விரைந்து சென்று மூதாட்டியை மீட்டனர்.
மூதாட்டியின் மற்றொரு மகனையும் மகளையும், வரவழைத்து அவர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
மூத்த மகன், எதற்காக தனது தாயை விஷ ஊசி போட்டு கொல்ல முயன்றார்? என தெரியவில்லை. எனவே அவரை, போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துள்ளனர்.