ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: நல்லகண்ணு வலியுறுத்தல்

ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான நல்லகண்ணு கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: நல்லகண்ணு வலியுறுத்தல்
Published on

கோவில்பட்டி:

ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான நல்லகண்ணு கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரை தருவதற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் கூட கர்நாடக மாநிலம் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்கவில்லை. கர்நாடக மாநிலத்தில் தண்ணீர் பிரச்சினைக்காக பலமுறை அனைத்துகட்சி கூட்டம் நடத்துகின்றனர். ஆனால் தமிழகத்தில் அவ்வாறு நடைபெறுவது இல்லை.

கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2018) நடைபெறும் சட்டமன்ற தேர்தலையொட்டி, அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுகின்றனர். மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட துரோகம் ஆகும்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், பயிர்கள் கருகி நஷ்டம் அடைந்த 100-க்கு மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். ஆனால் அவர்களுடைய குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையும் வழங்கப்படவில்லை. கூட்டுறவு வங்கிகளிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும்.

ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரும் பணி என்ற பெயரில் மணல் கொள்ளை நடந்தது. உடன்குடி, சாத்தான்குளம், பேய்க்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. கோவில்பட்டியில் 2-வது குடிநீர் திட்ட பணிக்காக 10 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட வேண்டும். இதில் 7 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளன. இன்னும் 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டும் பணி தொடங்கப்படவில்லை. மேலும் கோவில்பட்டி பகுதிகளில் 88 கிலோ மீட்டர் தூரத்துக்கு குடிநீர் குழாய்கள் பதிக்க வேண்டி உள்ளது. எனவே கோவில்பட்டியில் 2-வது குடிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிடப்பட்டு உள்ளது. முறைகேடாக கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டதில் ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அளித்த அறிக்கை தமிழக அரசு வெளியிடவில்லை.

இதேபோன்றுதான் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தி அறிக்கை அளித்தாலும் வெளியிட மாட்டார்கள். எனவே ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு நல்லகண்ணு தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com