

திருப்பதி:
சித்தூர் மாவட்ட கலெக்டர் பிரதியும்ணா திருப்பதிக்கு வந்தார். திருப்பதி சப்-கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா, கலெக்டரை நேரில் சந்தித்து நகரி தொகுதியில் செயல்படுத்த வேண்டிய வளர்ச்சிப்பணிகள், தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் குறித்துப் பேசினார்.
கோடைக்காலத்தில் நகரி தொகுதியில் பல இடங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மக்கள் குடிநீர் இல்லாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் வரவில்லை. எனவே குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் இடங்களில் வாகனங்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும். ஆழ்துளை கிணறுகளை சரி செய்து கொடுக்க வேண்டும். நகரி தொகுதியில் ஒட்டுமொத்த குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டதாரி இளைஞர்கள் வேலை தேடி அண்டை மாநிலமான தமிழ்நாடு, கர்நாடகா செல்கிறார்கள். எனவே நகரி தொகுதியில் புதிதாக வேலை வாய்ப்பை அரசு உருவாக்க வேண்டும். நகரி தொகுதியில் புதிதாக தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும், என கலெக்டரிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர், கலெக்டரிடம் கூறுகையில், ஆந்திர மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசு ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும் திருப்பதி மஞ்சாலத்தெருவை சேர்ந்த காங்கிரஸ் கட்சி தொண்டர் முனிகோட்டி என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவருடைய குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என சந்திரபாபுநாயுடு அறிவித்தார். ஆனால், இதுவரை முனிகோட்டியின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்படவில்லை. அந்த நிதி உதவியை வழங்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என ரோஜா கேட்டுக் கொண்டார்.