முத்துப்பேட்டையில் மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இன்று அதிகாலை மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின்சாரம் தாக்கி பலியான நாகரத்தினம், வீரம்மாள்.
மின்சாரம் தாக்கி பலியான நாகரத்தினம், வீரம்மாள்.
Published on

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மன்னார்குடி ரோட்டில் சித்திரை குளக்கரை பகுதியை சேர்ந்தவர் நாகரத்தினம் (வயது 65), கொத்தனார். இவரது மனைவி வீரம்மாள் (55).

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் வீரம்மாள் சிறுநீர் கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார்.

அப்போது வீட்டின் வெளியே இருந்த கம்பிவேலி மீது எர்த் கம்பி பட்டு மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதை வீரம்மாள் கவனிக்காமல் , கம்பி வேலி மீது கையை வைத்தார்.

உடனே கம்பியில் இருந்து வீரம்மாள் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் அலறி கூச்சல் போட்டார். இதனால் சத்தம் கேட்டு நாகரத்தினம் வெளியே ஓடி வந்தார். மின்சாரம் தாக்கி மனைவி அலறுவதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே மனைவியை காப்பாற்ற அவர் விரைந்து வந்தார். அப்போது அவர் மனைவியை மீட்ட போது திடீரென அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் கணவன்- மனைவி இருவரையும் மின்சாரம் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

இன்று காலை அந்த வழியாக சென்ற பொது மக்கள், வீட்டுக்கு வெளியே நாகரத்தினம், அவரது மனைவி வீரம்மாள் ஆகியோர் மின்சாரம் தாக்கி பலியாகி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து மின்சாரம் தாக்கி பலியான கணவன்- மனைவி உடல்களை கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பலியான நாகரத்தினம்- வீரம்மாள் தம்பதியினருக்கு ராஜாராம் என்ற மகனும், சரண்யா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. ராஜாராம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

மின்சாரம் தாக்கி தம்பதியினர் பலியான சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com