

பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கதிர்காமு. இவரது வீடு தேனி டி.வி.ஆர். ஹவுஸ் பகுதியில் உள்ளது. ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக இருந்த கதிர்காமு தற்போது தினகரன் அணிக்கு தாவினார்.
கதிர்காமு எம்.எல்.ஏ. வீட்டிற்கு கொலை மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து அவரது மகன் அசோக்குமார் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் கொலை மிரட்டல் கடிதம் விடுத்தவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து கதிர்காமு எம்.எல்.ஏ. வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையில் மிரட்டல் கடிதம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருந்து வந்தது என தெரிய வந்தது.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் வீடு அதே பகுதியில் உள்ளது. எனவே அப்பகுதியில் இருந்து வேண்டும் என்றே யாரேனும் கடிதம் அனுப்பினார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.