வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- லாரி டிரைவர் பலி

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 36), லாரி டிரைவர். இவர் நேற்று இரவு 7.15 மணியளவில் கருப்பம்புலத்திலிருந்து மருவூர் தெற்கு பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அவர் வேதாரண்யம்- திருத்துறைப் பூண்டி சாலையில் உள்ள பன்னாள் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் நேருக்குநேராக மோதியது.

இதில் படுகாயமடைந்த பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர் மீது மோதிய மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த கடினவயலை சேர்ந்த பொன்னியின் செல்வன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இதுபற்றிய தகவல் கிடைத்தும் வாய்மேடு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முனியாண்டி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பன்னீர்செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய பொன்னியின் செல்வனிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் பள்ளங்கோவிலில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவது தெரியவந்தது. விபத்தில் பலியான பன்னீர் செல்வத்துக்கு கலைமகள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com