திருக்கனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்: புதுமாப்பிள்ளை பலி

திருக்கனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதலில் புதுமாப்பிள்ளை பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருக்கனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்: புதுமாப்பிள்ளை பலி
Published on

திருக்கனூர்:

திருக்கனூர் அருகே சந்தைபுதுக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ் என்ற ராஜசேகர் (வயது32). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் பொதுப்பணித்துறையில் தினக்கூலி ஊழியராக பணிபுரிந்து வந்த இவர் பணி நீக்கம் செய்யப்பட்டதால் புதுவையில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.

நேற்று இரவு இவரும் அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பரான தனவேலு (34) என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் லிங்காரெட்டிபாளையத்துக்கு சென்றனர். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை ராஜ் ஓட்டிவந்தார். தனவேலு பின்னால் அமர்ந்து வந்தார்.

சந்தைக்புதுக்குப்பம் அருகே கைலாசபுரம் என்ற இடத்தில் வந்த போது எதிரே சந்தைக்புதுக்குப்ப முதுநகரை சேர்ந்த சதீஷ் (23) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், ராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாரதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

இதில் தூக்கி வீசப்பட்ட ராஜ், தனவேலு, சதீஷ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள வானூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக 3 பேரும் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து தனவேலு, சதீஷ் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்தில் பலியான ராஜிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. மாலதி (24) என்ற மனைவி உள்ளார். தற்போது மாலதி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

திருமணமான 6 மாதத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சந்தை புதுக்குப்பம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com