கொசு உற்பத்தி: மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ. 5 லட்சம் அபராதம்

கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்ததாக மதுரையில் தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
கொசு உற்பத்தி: மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ. 5 லட்சம் அபராதம்
Published on

மதுரை:

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. மதுரையிலும் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

டெங்கு மேலும் பரவாமல் தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த டெங்கு ஒழிப்பு பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேரில் சென்று டெங்கு ஒழிப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

மதுரை மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ்சேகர் மதுரையில் உள்ள மாநகராட்சி வார்டு பகுதிகளில் தினமும் ஆய்வு நடத்தி டெங்கு ஒழிப்பு பணியை முடுக்கிவிட்டுள்ளார்.

மதுரை தபால்தந்திநகர் பகுதியில் இன்றுகாலை மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ் சேகர் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் சுகாதாரமற்ற முறையில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. அந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த பகுதியில் 4 வீடுகள் பூட்டிய நிலையில் காணப்பட்டன. அங்கு முட்செடிகள் மற்றும் புதர்கள் வளர்ந்து கொசு உற்பத்திக்கு காரணமாக கண்டறியப்பட்டது. உடனடியாக வீட்டின் உரிமையாளருக்கு நோட்டீசு அனுப்ப அதிகாரிகளுக்கு அனீஷ் சேகர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று கமி‌ஷனர் அனீஷ் சேகர் ஆய்வு நடத்தினார். அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சோதனை நடத்தியபோது அங்கு மருத்துவ கழிவுகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன.

மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த டெங்கு புழுக்கள் காணப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் அந்த பகுதி காணப்பட்டதால் மருத்துவமனைக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து கமி‌ஷனர் அனீஷ்சேகர் உத்தரவிட்டார். மேலும் அங்குள்ள நோயாளிகளின் மருத்துவ சிகிச்சை விபரங்களை கேட்டறிந்த அவர் டாக்டர்கள் பணியில் இல்லாததை கண்டு எச்சரிக்கை செய்தார்.

இந்த சோதனையின் போது மேற்கு மண்டல உதவி கமி‌ஷனர் அரசு, உதவி நகர் நல அலுவலர் பார்த்திபன், சுகாதார அலுவலர் விஜயகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரைவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com