மன்னார்குடி அருகே துப்பாக்கிமுனையில் வங்கியில் பணம் - நகைகள் கொள்ளை
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த அசேஷம் பகுதியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் இந்த வங்கி வழக்கம்போல் இயங்கிக் கொண்டு இருந்தது. வங்கிக்கு முதலில் 3 பேர் வாடிக்கையாளர்போல உள்ளே வந்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வெளியே சென்றுள்ளனர்.
சில நிமிடங்கள் கழித்து அந்த வங்கியின் முன்பு ஒரு கார் வேகமாக வந்து நின்றது. அந்த காரில் இருந்து 5 மர்ம நபர்கள் முகத்தை கைக்குட்டையால் மூடியபடி உள்ளே நுழைந்தனர். 5 பேரும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து திருநெல்வேலி வழக்கு மொழி போல் பேசினர். 2 பேர் கையில் துப்பாக்கியும், ஒருவர் கையில் கத்தியும் வைத்திருந்தனர். துப்பாக்கிமுனையில் மேலாளர் கோவிந்தராஜ் மற்றும் காசாளர் தியாகராஜன் ஆகியோரை மிரட்டி வங்கியின் லாக்கர் சாவியை கேட்டனர்.
காசாளரிடம் இருந்த ஒரு சாவியை வாங்கிக்கொண்டு மற்றொரு சாவி எங்கே? என்று கேட்டனர். மற்றொரு சாவி வங்கியின் ஊழியர் கோடீஸ்வரன் வைத்திருப்பதாகவும், அவர் சாப்பிட சென்றிருப்பதாகவும் காசாளர் கூறினார். இதனால் அவர் வரும்வரை காத்திருந்து அவர் வந்ததும் அவரையும் துப்பாக்கிமுனையில் மிரட்டி மற்றொரு சாவியை அவரிடமிருந்து பிடுங்கி லாக்கர் அறையை திறந்து உள்ளே சென்றனர்.
நகைகள் இருக்கும் லாக்கரை அவர்களால் திறக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் தரையில் துப்பாக்கியால் சுட்டு வேறு சாவி இருக்கிறதா? என கேட்டு மிரட்டினர். வேறு சாவிகள் இல்லையென்றதும் நேரமாகிவிட்டதால் காசாளரிடம் இருந்த ரூ.6 லட்சம், மேஜையில் இருந்த 84 கிராம்(10½ பவுன்) அடகு நகைகள் ஆகியவற்றை மட்டும் கொள்ளையடித்துக் கொண்டு காரில் ஏறி தப்பிச் சென்றனர்.
போகும்போது வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் சேமிக்கும் ‘ஹார்டுடிஸ்க்’கையும் கழற்றி எடுத்துச் சென்றனர். வங்கி ஊழியர்களின் 5 செல்போன்களையும் பிடுங்கிக் கொண்டு சென்றனர்.
இதுகுறித்து வங்கியின் மேலாளர் கோவிந்தராஜ் மன்னார்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவம் நடந்த வங்கிக்கு மன்னார்குடி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணன் ஆகியோர் வங்கிக்கு வந்து மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை செய்தனர்.
மன்னார்குடி செல்லும் சாலையில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ய போலீசாருக்கு அவர்கள் உத்தரவிட்டனர். போலீஸ் மோப்ப நாய் ‘ராக்பி’ வரவழைக்கப்பட்டு, அது வங்கியில் இருந்து சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. கைரேகை நிபுணர்கள் வங்கியில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
பட்டபகலில் வங்கியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் மன்னார்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொள்ளையர்கள் மிகவும் முன்ஜாக்கிரதையாக செயல்பட்டுள்ளதால் இதற்கு முன்பு வேறு எங்கேனும் வங்கியில் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடையவர்களாக இருக்கலாமோ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லாக்கரை திறக்க முடியாததால் அதில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் தப்பின. இதே வங்கியில் சில மாதங்களுக்கு முன்பு போலி நகைகளை வைத்து ரூ.1½ கோடி மோசடி நடைபெற்றதும், இதுதொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

