காந்திநகர்:
குஜராத் மாநில சட்ட சபைக்கு நாளை (சனிக் கிழமை) 89 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் நாளை தேர்தல் நடக்கும் 89 தொகுதிகளிலும் தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் அமைந்துள்ளன.
தெற்கு குஜராத், சவுராஷ்டிரா இரு மண்டலங்களும் பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு மிக்க பகுதிகளாகும். இங்கு பிரதமர் மோடி தீவிர பிரசாரம் செய்தார். இங்குள்ள 89 தொகுதிகளிலும் 977 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
நாளை ஓட்டுப்பதிவுக்காக இந்த 89 தொகுதிகளிலும் 24 ஆயிரத்து 689 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்க உள்ளது.
இந்த நிலையில் குஜராத்தில் வருகிற 14-ந்தேதி மீதமுள்ள 93 தொகுதிகளுக்கும் 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் மத்திய குஜராத்தும், வடக்கு குஜராத்தும் பட்டேல் சமுதாயத்தினர் அதிகம் உள்ள பகுதியாகும்.
பட்டேல் இனத்தவர்களின் புதிய இளம் தலைவராக உருவெடுத்துள்ள ஹர்த்திக் பட்டேல் மத்திய குஜராத் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அவரது கத்வ பட்டேல் சமுதாயத்தினர் மிக அதிக அளவில் அங்கு உள்ளனர். அவர்களது வாக்குகள் இந்த தடவை காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடியும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவும் வடக்கு மற்றும் மத்திய குஜராத்தை குறி வைத்து காய்களை நகர்த்த தொடங்கி உள்ளனர். குறிப்பாக மத்திய குஜராத்தில் உள்ள மெக்சனா நகரில் பிரதமர் மோடி பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேச முடிவு செய்துள்ளார்.
பட்டேல்கள் இட ஒதுக்கீடு போராட்டம் நடத்திய போது இந்த நகரில்தான் அதிக கலவரம் நடந்தது. அங்கு பிரதமர் மோடி நாளை (9-ந்தேதி) பிரசாரம் செய்ய உள்ளார். இதைத் தொடர்ந்து அந்த நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வடக்கு மற்றும் மத்திய குஜராத்தில் பதிவாகப் போகும் வாக்குகள்தான் பா.ஜ.க. - காங்கிரஸ் கட்சிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.