வாஜ்பாய்க்கு லக்னோ நகரில் 25 அடி வெண்கலச் சிலை: மோடி திறந்து வைக்கிறார்

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு உத்தர பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் நிறுவப்பட்டுள்ள 25 அடி உயர வெண்கலச் சிலையை பிரதமர் மோடி 25-ம் தேதி திறந்து வைக்கிறார்.
மோடி - வாஜ்பாய்
மோடி - வாஜ்பாய்
Published on

மத்தியில் காங்கிரஸ் அல்லாத கட்சியின் ஆட்சியின் பிரதமராக ஐந்தாண்டுகள் நீடித்த முதல் தலைவர் என்ற பெருமைக்குரியவர் அடல் பிஹாரி வாஜ்பாய்.

மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் 25-12-1924 அன்று பிறந்த வாஜ்பாய், 1942-ம் ஆண்டு ’வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் இணைந்து போராடியதன் மூலமாக பொதுவாழ்வில் நுழைந்தார்.

பாராளுமன்றத்தில் அவரது பேச்சாற்றலை கண்டு வியப்படைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, 'என்றாவது ஒரு நாள் வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக வருவார்' என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

1970-ம் ஆண்டு இந்தியாவில் அந்நாள் பிரதமர் இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை சட்டம் (மிசா) பிரகடனப்படுத்தப்பட்ட போது, அதனை எதிர்த்துப் போராடி, கைதாகி, சிறைச் சென்ற முக்கிய அரசியல் தலைவர்களில் வாஜ்பாயும் ஒருவர் ஆவார்.

பின்னர், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உயர்ந்த வாஜ்பாயின் பெயர் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசியலோடு ஒன்றிணைந்த பெயராகவே மாறிப்போய் விட்டது.

திருமணமே செய்து கொள்ளாமல் முழுநேர அரசியல்வாதியாக வாழ்ந்த அவர், இந்தியாவின் 10-வது பிரதமராக 16-5-1996 அன்று பதவி ஏற்றார். எனினும், பாராளுமன்றத்தில் போதுமான எம்.பி.க்களின் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் போனதை தொடர்ந்து 13 நாட்களிலேயே அவர் பதவி விலக நேர்ந்தது.

பின்னர், 1998-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியதையடுத்து, இரண்டாவது முறையும் பிரதமராக அவர் பதவி ஏற்றார். தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் ஏற்பட்ட கருத்து மற்றும் கொள்கை முரண்பாடுகளின் விளைவாக இந்த முறையும் 13 மாதங்கள் மட்டுமே அவர் பிரதமராக பதவி வகிக்க முடிந்தது.

இம்முறை, முழுமையாக ஐந்தாண்டுகாலம் தனது பதவியை நிறைவுசெய்த வாஜ்பாய், பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் போர் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தி பாகிஸ்தானின் மூக்கை உடைத்தார். இதன் மூலம் இந்தியாவின் ஆற்றலையும், பெருமையையும் உலக நாடுகளுக்கு உணர்த்தினார்.

அதேவேளையில், நாட்டின் முக்கிய பெருநகரங்களை ஒன்றிணைக்கும் தங்க நாற்கர விரைவு நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக இந்தியாவின் உள்கட்டமைப்பையும் அவர் மேம்படுத்தினார்.

6 முதல் 14 வயதுக்கிடைப்பட்ட பிள்ளைகளுக்கு இலவசமாக கட்டாய கல்வி அளிப்பதற்காக வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய ‘சர்வ சிக்‌ஷா அபியான்’ திட்டத்தின் மூலம் பள்ளி மாணவ - மாணவிகளின் இடைநிற்றல் 60 சதவீதம் அளவுக்கு குறைந்தது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அரசியலில் இருந்து விலகி, பூரண ஓய்வில் இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு 2015-ம் ஆண்டில் நாட்டிலேயே மிகவும் உயரியதான ’பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது.

மரபுகளை எல்லாம் கடந்த வகையில் அந்நாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் இல்லம் தேடிச்சென்று சிறப்புக்குரிய இந்த விருதினை அவருக்கு வழங்கினார்.

தேர்ந்த அரசியல்வாதி, மிகச்சிறந்த நிர்வாகி என புகழப்படும் வாஜ்பாய் கவிதைகள் எழுதும் கலையிலும் கைதேர்ந்து விளங்கினார். உடல் நலக்குறைவால் டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாஜ்பாய் 16-8-2018 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளான வரும் 25-ம் தேதி உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் அவருக்கு நிறுவப்பட்டுள்ள  25 அடி உயர வெண்கலச் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

மேலும்,  லக்னோ நகரில் உள்ள சக்கஜேரியா பகுதியில் வாஜ்பாய் பெயரில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மருத்துவ பல்கலைக்கழகத்துக்கும் இந்தச் சிலை திறப்பு விழாவின்போது மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உத்தர பிரதேசம் முழுவதும் போராட்டங்களும் கலவரங்களும் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி லக்னோ நகருக்கு வருவதால் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை போலீசார் இப்போதே கவனிக்கத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com