

கள்ளக்குறிச்சி:
டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாசலம்), ரத்தின சபாபதி (அறந்தாங்கி) ஆகிய 3 பேருக்கும் சபாநாயகர் தனபால் கடந்த 2-ந்தேதி நோட்டீஸ் அனுப்பினார்.
அதில் அவர், “கட்சி விரோத செயல்களில் ஈடுபடுவதால் உங்கள் மீது கட்சி தாவல் சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது. இது பற்றி ஒருவாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
சபாநாயகர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன் இருவரும் கடந்த 3-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், “சபாநாயகர் தனபால் மீது தி.மு.க.தரப்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதால் எங்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க அவருக்கு அதிகாரம் இல்லை. எனவே சபாநாயகர் எங்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.
சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி தீபக்குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன் ஆகியோருக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு நீதிபதிகள் இடைக்கால தடைவிதித்தனர்.
மேலும் மனுவின் மீது விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபாலுக்கு நோட்டீசு அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிறகு இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இது குறித்து எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் கூறும் போது, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் நாங்கள். இந்த ஆட்சி தொடர வேண்டும். இந்த ஆட்சி நிலைக்க வேண்டும் என்று பாடுபட்ட எங்களுக்கு தகுதி நீக்க நோட்டீசை வழங்கினார்கள்.
ஆனால் இதை நீதி தேவதை தடுத்துள்ளது. இதன்மூலம் தர்மமும், நீதியும் வென்றுள்ளது. ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது என்றனர்.
சபாநாயகர் நோட்டீசை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. பிரபு வழக்கு தொடரவில்லை. தற்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியிருப்பது குறித்து பிரபு எம்.எல்.ஏ.விடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு கூறிய தீர்ப்பு எனக்கும் பொருந்தும். நீதிபதிகள் நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளனர். இது தர்மத்துக்கும், மன சாட்சிக்கும் கிடைத்த வெற்றியாகும். இதனால் நான் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.
எங்களை தகுதி நீக்கம் செய்ய நினைத்தார்கள். ஆனால், இனி எங்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது. நான் அ.தி.மு.க.வில்தான் இருக்கிறேன். நான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.தான். எப்போதும் அ.தி.மு.க.வில்தான் இருப்பேன். வேறு ஒன்றும் இப்போது சொல்ல விரும்ப வில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில் பிரபு எம்.எல்.ஏ. இன்று சட்ட சபை செயலாளர் சீனிவாசனிடம் ஒரு மனு அளித்தார். அதில் அவர், “சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உரிய பதில் அளிக்க மேலும் ஒருவாரம் அவகாசம் வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சபாநாயகர் ஏற்கனவே அனுப்பிய நோட்டீசுக்கு இன்று மாலைக்குள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த காலஅவகாசம் முடிவதாலும், பிரபு எம்.எல்.ஏ. சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால தடை பெறாததாலும் இன்று அவர் கூடுதல் அவகாசம் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கலைச் செல்வன், பிரபு, ரத்தின சபாபதி ஆகிய 3 பேரும் அ.தி.மு.க.வில்தான் இருக்கிறோம். தினகரனை ஆதரிக்கவில்லை என்று கூறி வருகிறார்கள்.
ஆனால் இவர்கள் தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக அ.தி.மு.க. தலைமை கூறுகிறது. நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது தினகரனுக்கு ஆதரவாக மாறலாம் என்ற அடிப்படையில்தான் அவர்கள் மீது நட வடிக்கை எடுக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். #MLAsDisqualification #SpeakerDhanapal