

திருவொற்றியூர்:
திருவொற்றியூர் மேற்கு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கதர் துறை அமைச்சர் பாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டனர்.
அப்போது அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அதிகமாக மழை பெய்துள்ளது. சென்னையில் பகலிலும் நிவாரண பணிகள் முனைப்போடு நடந்து வருகிறது.
திருவொற்றியூர் பகுதியில் தேங்கியுள்ள மழை நீர் 15 ராட்சத மின் மோட்டார் மற்றும் பம்பிங் ஸ்டேசன் வழியாக வெளியேற்றப்பட்டு விட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பணிகள், மருத்துவ முகாம்கள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
சென்னையை பொறுத்த வரை சவாலாக போக்கு வரத்து தடங்கல் இல்லாமல் செய்துள்ளோம். இதுவரை மின்னல், மின்சாரம் தாக்கியும், சுவர் இடிந்து விழுந்தும் 7 பேர் தமிழகத்தில் பலியாகியுள்ளனர் அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மழை விட்டுவிட்டு பெய்யாமல் ஒரே நாளில் அதிக மழை பெய்வதால் அடிப்படை கட்டமைப்புகள் தாங்குவதில்லை. உபரி நீர் வெளியேறி வருகின்றது.
ஒருவாரம் மழை இருப்பதாக தெரிய வருகிறது. அதனை எதிர் கொள்ள உள்ளாட்சி, மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் பொருளாளர் ராஜேந்திரன், அஜாக்ஸ், பரமசிவம், சிவில் முருகேசன் உடன் சென்றனர்.