

சென்னை:
ஊரக உள்ளாட்சித்துறை சார்பில் பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் திட்டப்பணிகள் தொடர்பான ஊரக ஊராட்சித் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சென்னையில் நடந்தது. அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2020-21-ம் நிதியாண்டில் இதுவரை தூர்வாரப்படாத ஏரிகள், குளங்களை புனரமைத்து, வரத்துக் கால்வாய் களை தூர்வாரும் பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்படி 2020- 21-ம் ஆண்டிற்கு இதுவரை ரூ.5,802.37 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு ரூ.3,786.05 கோடி ஊதியமாக வழங்கப்பட்டு உள்ளது. ஊழியர்கள் அனைவருக்கும் 15 நாட்களுக்குள் ஊதியம் நிலுவை இன்றி ஆதார் எண் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
ஊரக பகுதிகளை பசுமை மயமாக்கவும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் காரணிகளை கட்டுப்படுத்தவும், காலியாக உள்ள அரசு நிலங்கள், தனியார் நிறுவனங்கள், பொது பூங்காக்கள் மற்றும் இதர பொருத்தமான இடங்களில் ரூ.224.57 கோடி மதிப்பீட்டில் 72 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 11 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் உள்ள தனி நபர்கள் பயனடையும் வகையில் ரூ.872.87 கோடி மதிப்பீட்டில் 28,800 மாட்டுக்கொட்டகைகளும், 21,200 ஆட்டுக் கொட்டகைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், கூட்டுறவு பால் சங்கங்களுக்கு ரூ.30.54 கோடி மதிப்பீட்டில் 200 பால் சேகரிக்கும் கூடங்கள் கட்டப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு நிதி ஆதாரங்களை கொண்டு ஊரக பகுதிகளில் நடைபெற்று வரும் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர், அங்கன்வாடி மையங்கள், சிமெண்டு கான்கிரீட் பாதைகள், சிமெண்டு கான்கிரீட் வடிகால்கள், 2 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்டல் சாலைகள் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
ஊரகப் பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்த ரூ.900 கோடி மதிப்பீட்டிற்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.100 கோடி அளவிற்கு ஒப்பந்தப்புள்ளி விரைவில் கோரப்பட உள்ளது.
மேலும் திடக்கழிவு மேலாண் மை திட்டம் படிப்படியாக அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டமானது மாநிலத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தினை தினசரி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் முறையாக செயல்படுத்தி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.