ஜெயலலிதா பற்றி அமைச்சர் உருக்கமான பேச்சு - கண்கலங்கிய ஊட்டி பெண் கலெக்டர்

ஜெயலலிதாபற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய உருக்கமான பேச்சை கேட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உள்பட அதிகாரிகள் கண்கலங்கினர்.
ஆவின் வளாகத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அருகில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
ஆவின் வளாகத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அருகில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் புதிய நவீன பாலகங்கள் திறப்பு விழா ஊட்டியில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கே.ஆர்.அர்ச்சுணன் எம்.பி., சாந்திராமு எம்.எல்.ஏ., ஆவின் இணைய தலைவர் மில்லர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு புதிய நவீன பாலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். பின்னர் புதிதாக திறக்கப்பட்ட நவீன பாலகத்தில் நெய், பால் உள்ளிட்ட பொருட்களின் முதல் விற்பனையை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது-

தமிழகம் முழுவதும் தினமும் 33 லட்சம் லிட்டர் பால் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. ஆவின் பாலையே பொதுமக்கள் அதிகமாக விரும்பி வாங்குகின்றனர்.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி மற்றும் சென்னையில் இருந்து கோவை ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள முக்கிய இடங்களில் 85 நவீன பாலகங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 14 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு கோவையில் இருந்து 2 ஆயிரத்து 500 லிட்டர் பால் வாங்கப்பட்டு தினமும் 16 ஆயிரத்து 500 லிட்டர் பால் வினியோகம் செய்யப்படுகிறது.

பால் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களான வெண்ணெய், நெய், பால்கோவா, பாலாடைக்கட்டி, ஐஸ்கீரிம், பாதாம்பவுடர் ஆகிய பொருட்கள் மாதந்தோறும் 30 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லாபத்தில் இயங்கி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசும் போது, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் 4 ஆண்டுகளுக்கு மேல் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் சிறப்பாக பணிபுரிந்தவர் தற்போதைய நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா. அவரை ஜெயலலிதா செல்லமாக அழைப்பார்.

ஜெயலலிதாவிடம் நல்ல அதிகாரி என்ற பாராட்டையும் பெற்று உள்ளார். ஜெயலலிதா இருக்கும் போது, இன்னசென்ட் திவ்யா வெளிநாட்டுக்கு செல்வதற்காக அனுமதி கேட்டார். அப்போது ஜெயலலிதா, நீ என்னை விட்டு போகிறாயா? என்று வருத்தத்துடன் கேட்டு உள்ளார்.

இந்த கேள்வி கேட்ட ஜெயலலிதாவுக்கு தனது உடல் நிலை பற்றி முன்கூட்டியே தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளிநாட்டுக்கு போய் திரும்பி வரும் போது ஜெயலலிதா உயிருடன் இல்லை என்று அமைச்சர் பேசினார்.

இவ்வாறு அமைச்சர் பேசியதும் மேடையில் இருந்த கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உள்பட அதிகாரிகள் கண்கலங்கினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com