

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து பள்ளி வாகனங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள செட்டிநாடு பள்ளி வாகனங்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டுபவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து பரிசீலிக்கப்படும்.
2000 மின்சார பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, கோவை நகரங்களில் முதல் கட்டமாக இயக்கப்படும்.
இந்த வருடம் 24 லட்சத்து 205 மாணவர்களுக்கு பஸ்களில் இலவச பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறையின் மூலம் இதனை வழங்க இருக்கிறோம்.
பள்ளி வாகனங்கள் இதுவரை 31,143 ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 1009 வாகனங்கள் மாணவர்களின் பாதுகாப்பு குறைவாக இருந்ததாக இயக்க அனுமதிக்கவில்லை.
பின்னர் அவற்றை சரி செய்த பின்னர் இயக்க அனுமதிக்கப்பட்டது. 1143 பள்ளி வாகனங்கள் சாலையில் இயக்க தகுதியற்றதாக கருதி நிறுத்தப்பட்டுள்ளது. மீறி இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து கமிஷனர் சமய மூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.