பிளாஸ்டிக் அரிசி விற்றால் குண்டர் சட்டத்தில் கைது: அமைச்சர் கந்தசாமி எச்சரிக்கை

வியாபாரிகள் அரிசியில் கலப்படம் செய்து விற்பதாக தெரியவந்தால் அரசிடம் புகார் செய்யலாம். அத்தகைய வியாபாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்வோம் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.
பிளாஸ்டிக் அரிசி விற்றால் குண்டர் சட்டத்தில் கைது: அமைச்சர் கந்தசாமி எச்சரிக்கை
Published on

புதுச்சேரி:

வடமாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இது தென் மாநில மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பான விவாதம் புதுவை சட்டசபையில் நேற்று நடந்தது.

அப்போது உணவு அமைச்சர் கந்தசாமி புதுவையில் விற்பனை செய்யப்படும் அரிசி குறித்து கடைகளில் சோதனை நடத்தி அந்த அரிசி ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என கூறினார்.

இந்த நிலையில் இன்று காலை அமைச்சர் கந்தசாமி புதுவை மி‌ஷன் வீதியில் உள்ள தனியார் அரிசி கடைகளில் ஆய்வு மேற் கொண்டார்.

அங்கு கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த பல வகை அரிசிகளை கையில் எடுத்து பார்த்தார். அந்த அரிசியின் தரம் மற்றும் அரிசி எங்கிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. விலை போன்ற விவரங்களை வியாபாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது அவருடன் வந்திருந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அரிசியை ஆய்வுக்கு எடுத்து கொண்டனர்.

இதையடுத்து அமைச்சர் கந்தசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பிளாஸ்டிக் அரிசியை கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தது. இதன் பேரில் தற்போது ஆய்வு செய்து வருகிறோம்.

வியாபாரிகள் அரிசியில் கலப்படம் செய்து விற்பதாக தெரியவந்தால் அரசிடம் புகார் செய்யலாம். அத்தகைய வியாபாரிகளை குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்கவும் தயங்க மாட்டோம்.

தரமான அரிசியை குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்று கடந்த காலங்களில் வியாபாரிகளை அணுகி அறிவுறுத்தினோம். அதேபோல் மீண்டும் அத்தியாவசிய பொருட்களை தரமாகவும், குறைந்த விலையிலும் வழங்க வேண்டும் என வியாபாரிகளிடம் அறிவுறுத்த உள்ளோம்.

கலப்பட அரிசி தொடர்பாக நுகர்வோர்கள் 0413-2272347 என்ற தொலைபேசி எண்ணிலும், 18004251084 என்ற இலவச எண்ணிலும் புகார் செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது குடிமைப் பொருள் வழங்கல்துறை செயலாளர் சுந்தரவடி வேலு, இயக்குனர் பிரிய தர்ஷிணி, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், உணவு பாதுகாப்பு அதிகாரி தனராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com