தனியார் பால் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?: அமைச்சருக்கு பால் முகவர்கள் கேள்வி

தனியார் பால் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு பால்முகவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தனியார் பால் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?: அமைச்சருக்கு பால் முகவர்கள் கேள்வி
Published on

சென்னை:

தமிழ்நாடு பால் முகவர்கள் நல சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த வாரம் ஆவின் பால் பொருட்கள் அறிமுக விழாவில் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பால் நிறுவனங்களின் பாலும் கலப்படம் நிறைந்தது எனவும், ஆவின் பால் மட்டுமே தரமான பால் எனவும் பேசி இருக்கிறார்.

அப்படியெனில் தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 1 கோடியே 25 லட்சம் லிட்டர் பாலினை விற்பனை செய்யும் தனியார் பால் நிறுவனங்கள் கலப்படம் செய்கின்றன என்பதை தெரிந்திருந்தும் அந்நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆவின் பால் தரமான பால் என நற்சான்றிதழ் வழங்கி விட்டு ஆவின் பால் உற்பத்தியையும், அதன் விற்பனையையும் நாளொன்றுக்கு சுமார் 25 லட்சம் லிட்டருக்கு மேல் அதிகப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? இதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலசங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் இந்தியா முழுவதிலும் (தமிழகம் உள்பட) விற்பனையாகும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பாலின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ததில் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு அத்தியாவசியமான உணவுப் பொருளாக விளங்கக்கூடிய பாலின் 68 சதவீதம் கலப்பட பால்தான்.

அத்தியாவசிய பொருளாக உயிர்காக்கும் பொருளாக விளங்கும் பாலில் தண்ணீர், குளுக்கோஸ், சோயா பவுன்டர், ஜவ்வரிசி மற்றும் யூரியா, வாஷிங் சோடா, அழுக்கை நீக்கும் டிடர்ஜென்ட் ஆயில், வார்னீஷ், பெயிண்ட், பிரேதங்களை பதப்படுத்தப் பயன்படும் பார்மாலின் போன்ற பொதுமக்களின் உயிருக்கு தீங்கிழைக்கும் பல ரசாயன பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்னும் அதிர்ச்சிகரமான தகவலை கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்தது.

பாலில் கலப்படம் என்பது தமிழகத்தில் உள்ள 7½ கோடி மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதாலும், குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு பால் அத்தியாவசியமான உணவுப் பொருளாக விளங்கி வருவதாலும் மக்கள் நலன் சார்ந்த அரசு என சொல்லிக் கொள்ளும் அ.தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் பாலில் கலப்படம் செய்கின்ற நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழக முதல்வர் ஆகியோரை தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

கலப்பட பால் நிறுவனங்கள் மீது இனியும் நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருமானால் எங்களது சங்கத்தின் சார்பில் சட்ட வல்லுனர்களிடம் கலந்து ஆலோசித்து விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com