எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்துவது வேடிக்கையாக உள்ளது: ஆர்.நல்லக்கண்ணு குற்றச்சாட்டு

எம்.ஜி.ஆர். கொண்டுவந்த பணி நிரந்தர சட்டத்தை நிறைவேற்றாமல், அ.தி.மு.க. அரசு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்துவது வேடிக்கையாக உள்ளது என்று ஆர்.நல்லக்கண்ணு குற்றம்சாட்டினார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்துவது வேடிக்கையாக உள்ளது: ஆர்.நல்லக்கண்ணு குற்றச்சாட்டு
Published on

சென்னை:

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் இருந்து, கோட்டை நோக்கி நேற்று பேரணி புறப்பட்டது. ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.சுப்பராயன் தலைமை தாங்கினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் ரா.முத்தரசன், ஏ.ஐ.டி.யூ.சி. தேசிய செயலாளர் வஹிதா நிஜாம், மாநில பொதுச்செயலாளர் டி.எம்.மூர்த்தி, துணை பொதுச்செயலாளர் கே.ரவி மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

பேரணி, புதுப்பேட்டை தெற்கு கூவம் சாலை வழியாக லேங்க்ஸ் தோட்டச்சாலை சந்திப்பை அடைந்தது. தொடர்ந்து முன்னேறி செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து லேங்க்ஸ் தோட்டச்சாலை சந்திப்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. அப்போது, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உள்பட கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பேசினர்.

பேரணியை தொடங்கி வைத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு பேசியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, ஒப்பந்த பணியாளர்களுக்கு சம வேலை-சம ஊதியம் வழங்கவேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேறும் வரையிலும் போராட்டம் தொடரும். ‘நீட்’ தேர்வு விவகாரத்தில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாவை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லாமலேயே மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது. ஒப்புதல் பெறுவதற்கு முயற்சிக்காமல், அதனை தமிழக மாணவர்கள் மீது மத்திய அரசு திணிக்கிறது.

480 நாட்கள் பணி செய்தால் பணி நிரந்தரம் என்று எம்.ஜி.ஆரால் கொண்டுவரப்பட்ட சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மறந்துவிட்டு, தற்போதுள்ள அ.தி.மு.க. அரசு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com