

சென்னை:
சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கான தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி உள்ளனர். இங்கு கடந்த 1 மாதமாக தண்ணீர் சரிவர வரவில்லை.
இது குறித்து மருத்துவ கல்லூரி முதல்வருக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மாணவர்கள் புகார் தெரிவித்து இருந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு மருத்துவ கல்லூரி பட்டமேற்படிப்பு மாணவர்கள் திடீரென அரசு பொதுமருத்துவமனை டவர் பிளாக் 1 வாயிலில் அமர்ந்து ‘திடீர்’ போராட்டம் நடத்தினார்கள். ‘விடுதிக்கு உடனடியாக தண்ணீர் வழங்க வேண்டும், தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்’ என கோஷம் எழுப்பினார்கள்.
மாணவர்கள் போராட்டம் 3 மணி நேரம் நீடித்தது. சென்னை அரசு மருத்துவ கல்லூரி துணை முதல்வர் நாராயணசாமி மற்றும் போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
குடிநீர் வாரிய அதிகாரிகள் உறுதி அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினார்கள். அதை தொடர்ந்து குடிநீர் வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து தண்ணீருக்கு ஏற்பாடு செய்வதாக மாணவர்களிடம் உறுதி அளித்தனர்.
இது குறித்து பட்ட மேற்படிப்பு மாணவரும், டாக்டருமான அருள் கூறியதாவது:-
சென்னை அரசு மருத்துவக் கல்லூரி பட்ட மேற்படிப்பு மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. கடந்த 1 மாதமாக தண்ணீருக்காக கஷ்டப்பட்டு வருகிறோம்.
மேலும் 4 நாட்களாக விடுதிக்கு தண்ணீர் வரவில்லை. குளிப்பதற்கும், பல் துலக்குவதற்கும் கூட தண்ணீர் இல்லை. எங்கள் விடுதியின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியை விரிவுபடுத்தி கட்ட வேண்டும். இந்த விடுதியில் உள்ள தண்ணீரை அருகில் உள்ள ‘கேன்டீன்’-க்கும் உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எங்களுக்கு தண்ணீர் நிரந்தரமாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.