

அயோத்தி நிலப் பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த மூன்று பேர் கொண்ட மத்தியஸ்த குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.
இந்த குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் எங்களால் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் செய்யமுடியவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் வரும் 6-ந்தேதியில் இருந்து தினமும் அயோத்தி தொடர்பான வழக்கும் நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மகாபாரதத்திற்கு முன்பே மத்தியஸ்தம் தோற்றுப்போனது என்று உத்தர பிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆதித்யநாத் கூறுகையில் ‘‘அயோத்தி நிலம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை. மத்தியஸ்த குழுவால் ஏதும் செய்ய இயலாது என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் மத்தியஸ்த குழுவின் முயற்சி சிறப்பானது. மத்தியஸ்த முயற்சி மகாபாரதத்திற்கு முன்பாகவே உருவாக்கப்பட்டது. ஆனால் அதற்கு சிறந்த பலன் கிடைக்கவில்லை’’ என்றார்.