ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பறந்துகொண்டிருந்த பாகிஸ்தான் தேசிய கொடியை அகற்றிய நபர் கைது - போலீசாரின் நடவடிக்கையை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கொடிக்கம்பத்தில் பறந்த பாகிஸ்தான் தேசிய கொடியை அகற்றிய நபரை போலீசார் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை எதிர்த்தும், மனித உரிமை மீறல்களை கண்டித்தும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தான் கொடியை அகற்றிய அகமது
பாகிஸ்தான் கொடியை அகற்றிய அகமது
Published on

மீர்பூர்:

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர், போலீசாரும் அத்துமீறல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து குற்றச்சாடுகள் எழுந்த வண்ணம் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடைபெற்று வருவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் போலீசாரின் அத்துமீறல்களுக்கு கண்டனம் தெரிவித்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மீர்பூர் மாவட்டம் டட்யல் நகரை சேர்ந்த பத்திரிக்கையாளரும், சமூக செயல்பாட்டாளருமான தன்வீர் அகமது தனது பகுதியில் உள்ள கம்பத்தில் ஏற்றப்பட்டிருந்த பாகிஸ்தான் தேசிய கொடியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். 

ஆனால் கோரிக்கை ஏற்படாததால் ஆத்திரமடைந்த அகமது கடந்த வெள்ளிக்கிழமை தான் வசித்து வரும் பகுதியில் உள்ள பொதுஇடத்தில் கொடிக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்த பாகிஸ்தான் தேசிய கோடியை தனி ஆளாக அகற்றினார்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பறந்துகொண்டிருந்த பாகிஸ்தான் கொடியை அகமது அகற்றுவது போன்ற புகைப்படம், வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானதையடுத்து அவரை போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட அகமதுவை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கடுமையாக தாக்கியும், துன்புறுத்தவும் செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் டட்யல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அகமது கைது செய்யப்பட்டதை கண்டித்தும், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், போலீசாரின் தாக்குதல்கள், நிர்வாக ஊழல், தொடர் மின் தடை என பல்வேறு விவகாரங்களை கண்டித்து பாகிஸ்தான் அரசுக்கு எதிராக டட்யல் நகரில் நேற்று நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் பேரணியாக சென்று பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரபரப்பு ஏற்பட்டது.    

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com