இந்திய விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் காலமானார்: ராணுவ மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். டெல்லி ராணுவ மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
இந்திய விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் காலமானார்: ராணுவ மருத்துவமனையில் உயிர் பிரிந்தது
Published on

இந்திய விமானப்படையின் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அர்ஜன் சிங். 1965-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றபோது விமானப்படைக்கு தலைமை தாங்கி சிறப்பாக வழி நடத்தியவர். 5 நட்சத்திரம் பெற்ற ஒரே விமானப்படை தளபதி என்ற பெருமையை பெற்றவர்.

98 வயதான அர்ஜன் சிங்கிற்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்தும் விசாரித்தனர்.

இந்நிலையில், ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அர்ஜன் சிங், இன்று இரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் லியால்பூரில் (இப்போதைய பாகிஸ்தான்) 1919-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி பிறந்த அர்ஜன்சிங், 19-வது வயதில் இங்கிலாந்தின் கிரான்வெல் ராயல் விமானப்படை கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பு முடித்தார். பின்னர் இந்திய விமானப்படையில் இணைந்த அவர், தனது பணிக்காலத்தில் 60-க்கும் மேற்பட்ட வெவ்வேறு விதமான விமானங்களில் பயணித்துள்ளார். 1969-ம் ஆணடு ஓய்வு பெறும் வரையில், தனது விமான பயிற்சியை நிறுத்தவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com