

வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு பகுதி மக்களுக்கு மஞ்சளாறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அலைந்து திரியும் நிலை உள்ளது. மஞ்சளாறு, மருதாநதி ஆகிய நதிகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி சிலர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வத்தக்குண்டு வெங்கி டாபட்டி தெருவை சேர்ந்தவர் வீரன் (வயது50). இவர் மணல் கொள்ளையில் ஈடுபட்டதால் போலீசார் கைது செய்தனர்.
ஜாமீனில் வெளியே வந்த வீரன் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் ஆஜராகி தினசரி கையெழுத்திட்டு வந்தார். இந்த நிலையில் மஞ்சளாற்றில் டிராக்டர் மூலம் மணல் கடத்தி வந்து உள்ளார்.
கணவாய்பட்டி பகுதியில் வத்தலக்குண்டு சப்-இன்ஸ்பெக்டர் மாயன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணல் கடத்தி வந்த வீரன் டிராக்டரை விட்டு விட்டு தப்பி சென்றார்.
அவரை போலீசார் தேடி வந்தனர். இன்று காலை அதே பகுதியில் பதுங்கி இருந்த வீரனை போலீசார் மடக்கி பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.