ரூ.2 ஆயிரம் பரிசு பெறுவதற்காக 50 முட்டை சாப்பிடுவதாக பந்தயம் கட்டியவர் பலி

உத்தர பிரதேசத்தில் 50 முட்டை சாப்பிடுவதாக பந்தயம் கட்டிய ஒருவர், 41-வது முட்டை சாப்பிடும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள பிபிகஞ்ச் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் யாதவ்.

42 வயதான இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

சுபாஷ்யாதவ் அந்த பகுதியில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று அவரும், அவரது நண்பர் ஒருவரும் பிபிகஞ்ச் மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர்.

அவர்கள் இருவரும் முட்டை சாப்பிட்டபோது அவர்களுக்குள் திடீரென முட்டை சாப்பிடுவது தொடர்பாக கடும் விவாதம் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் 50 முட்டை சாப்பிட முடியுமா? என்று சுபாஷிடம் அவரது நண்பர் சவால் விட்டார்.

அந்த சவாலை ஏற்றுக்கொண்ட சுபாஷ் 50 முட்டை சாப்பிட்டு விட்டால் பரிசாக எவ்வளவு பணம் தருவாய் என்று கேட்டார். அதற்கு அவரது நண்பர் ஒரே நேரத்தில் இப்போதே 50 முட்டை சாப்பிட்டால் ரூ.2 ஆயிரம் பரிசு தருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து இந்த சவாலை சுபாஷ் ஏற்றுக்கொண்டு 50 முட்டைகளை கொண்டு வரும்படி கூறினார். 50 அவித்த முட்டைகள் வந்ததும் அவற்றை ஒவ்வொன்றாக சுபாஷ் சாப்பிட ஆரம்பித்தார்.

40 முட்டைகளை அவர் அடுத்தடுத்து சாப்பிட்டு தனது நண்பரை மிரள வைத்தார். ஆனால் 41- வது முட்டையை சாப்பிட ஆரம்பித்த போதுதான் சிக்கல் உருவானது. 41-வது முட்டையை விழுங்கிய அடுத்த வினாடி அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை எழுப்ப நடந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. உடனடியாக அவரை அந்த பகுதியில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கிருந்த டாக்டர்கள் அவரை ஜான்பூரில் உள்ள சஞ்சய்காந்தி மருத்துவ அறிவியல் கழகம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும்படி தெரிவித்தனர்.

அதன்படி அந்த ஆஸ்பத்திரிக்கு சுபாஷ் யாதவை கொண்டு சென்றனர். அங்கு தீவிரசிகிச்சை அளித்தும் பலனின்றி சுபாஷ் உயிரிழந்தார்.

இதுகுறித்து மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், “முட்டையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் அவை உணவு குழாயை அடைத்ததோடு சுவாசத்தையும் தடுத்து விட்டது. இதனால் அவர் சுவாசம் கிடைக்காமல் மயங்கி விழுந்து இறந்துள்ளார்” என்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சுபாஷ் குடும்பத்தினர் போலீசில் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. இதனால் யார் மீதும் நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com