

சென்னை:
திருவல்லிக்கேணியில் உள்ள ஓட்டலில் கள்ளத் துப்பாக்கி விற்பதாக கிடைத்த தகவலின்படி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது கள்ளத் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட அண்ணாநகரைச் சேர்ந்த முருகன், வியாசர்பாடியைச் சேர்ந்த கோபி, ஜீவன்ராஜ், காஞ்சீபுரம் குமார், புளியந்தோப்பு அர்ஜுனன், மதுராந்தகம் பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 2 கள்ளத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த துப்பாக்கிகள் மேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியில் இருந்து வாங்கப்பட்டு விற்பனை செய்ய இங்கு கொண்டு வந்திருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக வியாசர்பாடியைச் சேர்ந்த கீர்த்தி என்பவரை போலீசார் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த அவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
திருவல்லிக்கேணியில் கள்ளத் துப்பாக்கி பிடிபட்ட பின்னரே தமிழகம் முழுவதும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வடமாநிலத்தில் இருந்து சென்னை வந்த ரெயிலில் துப்பாக்கி கடத்தி வந்த 3 பேரை திருவொற்றியூரில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
மேலும் திருச்சியில் கள்ளத் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட போலீஸ்காரர் உள்பட 3 பேர் சிக்கியது குறிப்பிடத்தக்கது.