

மதுரை:
வைகை அணையில் இருந்து மதுரை முடக்கு சாலை பகுதி வழியாக ராட்சத குழாயில் கொண்டு வரப்படும் குடிநீர் அரசரடி நீரேற்று நிலையத்தை வந்தடைகிறது.
பின்னர் அங்கிருந்து அனைத்து பகுதிகளுக்கும் பிரித்து வழங்கப்படுகிறது.
கடந்த மாதம் அரசரடிக்கு வரும் பிரதான குடிநீர் குழாயில் சாலை பகுதியில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் சாலைகளில் ஓடி வீணானது. பின்னர் ஓரிரு நாளில் இந்த உடைப்பு சரி செய்யப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் முடக்கு சாலை பகுதியில் அரசரடியில் இருந்து அந்த பகுதிக்கு செல்லும் பகிர்மான குழாய் திடீரென உடைந்தது. இதனால் அந்தப்பகுதி முழுவதும் வெள்ளம் போல குடிநீர் சாலைகளில் ஓடி வீணாவதை பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த குழாயில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதை தடுத்து தண்ணீர் வீணாவதை தவிர்க்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.