போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வூதிய வழக்கு: சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்

தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வூதியம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்து மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வூதிய வழக்கு: சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்
Published on

மதுரை:

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 15-ந் தேதி மதியம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை, ‘வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். பணிக்கு வர மறுப்பவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என மே 16-ந்தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில் மதுரை செக்கானூரணியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் அஞ்சல் அட்டையில் நீதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.

அதில், போக்குவரத்து கழக ஊழியர்கள் ஓய்வூதியம் கிடைக்காமல் பசி, பட்டினியுடன் தவிக்கும்போது, இந்த அரசுக்கு ஆதரவாக எங்கள் மீது எஸ்மா சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட எப்படி மனம் வந்தது. நாங்களும், குடும்பத்தினரும் ஓய்வூதியம் கிடைக்காமல் சாக வேண்டுமா? என எழுதியிருந்தார்.

இந்த அஞ்சல் அட்டையை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து பொதுநலன் வழக்காக எடுத்து விசாரித்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, இதுகுறித்து பதிலளிக்க தமிழக போக்குவரத்து துறையின் முதன்மை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முரளிதரன், கார்த்திகேயன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யாததோடு, கூடுதல் கால அவகாசமும் கோரப்பட்டது.

இதையேற்ற நீதிபதிகள் விரிவான பதில் அறிக்கையை தாக்கல் செய்யவும், வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றியும், உத்தரவிட்டு வழக்கை ஜூன் 9-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com