2000 ரூபாய் உதவித்தொகை வழங்க தடையில்லை- வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு அரசு சார்பில் 2000 ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்க தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. #Rs2000SplAssistance #HC
2000 ரூபாய் உதவித்தொகை வழங்க தடையில்லை- வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
Published on

வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் ஏழைத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு தடை கோரி விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முதலில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என கூறிய அரசு, தேர்தல் ஆதாயத்திற்காக தற்போது ஏழைகளாக கருதப்படுபவர்களின் விவரங்களையும் சேகரிக்கும் வகையில் தற்போது படிவங்களை விநியோகித்து வருவதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அரசாணை போலி எனவும், இதனை மனுதாரர் எங்கிருந்து பெற்றார் என, அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தற்போது விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டு வரும் நிலையில், யார் யாருக்கு உதவித்தொகை வழங்குவது என பின்னர் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

அதன்படி வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் மற்றும் ஏழைகள் பற்றிய விவரங்கள் அடங்கிய அரசாணை தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதன்பின்னர் அரசாணையில் திருத்தம் செய்துள்ளது தொடர்பாக அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கருணாநிதி தரப்பில் நேற்று முறையீடு செய்யப்பட்டது. அது தொடர்பாக தனியாக மனுத்தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள், 2 ஆயிரம் ரூபாய் வழங்க தடை கோரிய வழக்கில் விசாரணை முடிந்து விட்டதால் நாளை (மார்ச் 7) தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

அதன்படி, இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், 2000 ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்குவதற்கு தடையில்லை என தெரிவித்தனர். சிறப்பு நிதி உதவி வழங்குவதற்காக 60 லட்சம் ஏழை குடும்பங்களைக் கண்டறிய சரியான நடைமுறை பின்பற்றப்பட்டிருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த திட்டத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். #Rs2000SplAssistance #HC

X

Maalai Malar
www.maalaimalar.com