

மாதவரம்:
கோயம்பேட்டில் பஸ் நிலையத்தில் இட நெருக்கடியை குறைக்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2011-ம் ஆண்டில் மாதவரத்தில் தனியாக ஒரு பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி மாதவரம் ரவுண்டானா அருகில் 8 ஏக்கர் நிலம் இடம் தேர்வு செய்யப்பட்டு 95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகள் 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அடுக்குமாடி பஸ் நிலையம் கீழ்தளம், மேல் தளம் என இரண்டு அடுக்குகளில் கட்டப்பட்டு வருகிறது.
கீழ் தளத்தில் சுமார் 50 பஸ்களும், மேல் தளத்தில் சுமார் 50 பஸ்களும் நிறுத்தும் அளவுக்கு தளம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த அடுக்குமாடி பஸ் நிலையத்தில் டிரைவர், கண்டக்டர், பயணிகள் ஓய்வு எடுக்கும் அதி நவீன அறை, ஓட்டல்கள், வணிக வளாகம், பயணிகளுக்கான தனி நடைமேடை, மாற்று திறனாளிகளுக்கு பேட்டரி கார், இலவச குடிநீர் வசதி, கழிப்பிடவசதி, மற்றும் பார்க்கிங் வசதி ஆகியவை உள்ளன.
மேலும் திருடர்கள் மற்றும் சமூக விரோதிகளை கண்காணிக்க நவீன ரக கண்காணிப்பு கேமிராக்கள் அடங்கிய போலீஸ் உதவி மையம் அமைய உள்ளன.
ஆந்திர மாநிலம் நெல்லூர், திருப்பதி, காள ஹஸ்தி, விஜயவாடா மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இங்கிருந்து பஸ்கள் இயக்கப்பபட உள்ளன. இந்த அடுக்குமாடி பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல தனித்தனியாக பெரிய நுழைவு வாயில்கள் அமைக்கப்படுகின்றன.
இதுவரை சுமார் 75 சதவீத பணிகள் முடிந்து உள்ளன. இறுதி கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. எனவே இந்த இரண்டு அடுக்கு பஸ் நிலையம் விரைவில் பயணிகள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளியூரில் இருந்து வரும் பயணிகள் சென்னை நகருக்குள் செல்ல வசதியாக மாநகர பஸ்கள்,ஆட்டோ, டாக்சி நிறுத்த வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.
இதுபற்றி பயணிகள் கூறும்போது, பண்டிகை காலங்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் தற்போது கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்டம் காணப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மாதவரத்தில் கட்டப்பட்டு வரும் இந்த அடுக்குமாடி பஸ் நிலையம் திறக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறைந்து நேரம் மிச்சமாகும் என்று தெரிவித்தனர். #tamilnews