

நாமக்கல்:
தென்மண்டல பல்க் எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்ய மாநில அளவில் டெண்டர் நடத்த எதிர்ப்பு தெரிவித்தும் மீண்டும் பழைய முறைப்படி மண்டலம் வாரியாக டெண்டர் நடத்த வலியுறுத்தியும் கடந்த 12-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக தென் மண்டலத்தில் 4200 கியாஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் நாள் ஒன்றுக்கு 18 ஆயிரம் டன் கியாஸ் வீதம் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டரில் எரிவாயு நிரப்பும் மையங்களுக்கு (பாட்லிங் பிளாண்டு) கொண்டு செல்வது தடைப்பட்டது.
கியாஸ் டேங்கர் லாரிகள் போராட்டம் காரணமாக தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களிலும் கியாஸ் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட தொடங்கியது.
இந்த நிலையில் நேற்று மும்பையில் எண்ணெய் நிறுவன அதிகாரிகளுக்கும் தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே சுமூக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் மாநில வாரியான டெண்டர் என்ற அரசின் கொள்கை முடிவில் மாற்றம் செய்ய முடியாது என அதிகாரிகள் தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டது. அவற்றில் சில நிபந்தனைகளை தளர்த்த அதிகாரிகள் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் இன்று நாமக்கல்லில் தென்மண்டல பல்க் எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க அவசர பொதுக்குழு கூடியது. அவரச பொதுக்குழுவில் சங்க தலைவர் பொன்னம்பலம், செயலாளர் உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மும்பையில் எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து விவாதிக்கப்பட்டது. அதிகாரிகள் சில நிபந்தனைகளை ஏற்று கொள்வதாக உறுதி அளித்ததால் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடலாம் என சங்க உறுப்பினர்கள் சிலர் பொதுக்குழுவில் கோரிக்கை வைத்தனர். ஆனால் பெரும்பாலான நிர்வாகிகள் போராட்டத்தை வாபஸ் பெற கூடாது என்றும், அதிகாரிகள் தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகே இது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினர்.
இதனால் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நீடிப்பதாகவும், ஸ்டிரைக் வாபஸ் பெறவில்லை என்றும் நிர்வாகிகள் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். #tamilnews