

ஐதராபாத்:
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஆந்திர மாநிலம் புறக்கணிக்கப்பட்டதாக அம்மாநில
முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வேதனை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்றைய கேள்வி நேரத்தின்போது, கடந்த 2014-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஆந்திர
மாநிலம் தொடர்பான மறு கட்டமைப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆந்திர மாநில
காங்கிரஸ் எம்.பி., கே.வி.பி. ராமச்சந்திரா ராவ், துணை சபாநாயகர் பி.ஜே. குரியன் அமர்ந்திருந்த நாற்காலிக்கு அருகே ‘ஆந்திரப்
பிரதேசத்தை காப்பாற்றுங்கள்’ என்ற பதாகையுடன் நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், மத்திய நிதிநிலை அறிக்கையில் ஆந்திர மாநிலம் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும்
8-ம் தேதி மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டத்துக்கு இடதுசாரி இயக்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாணவர் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகள் ஒன்றுசேர்ந்து இன்று கூட்டாக அறிக்கை
வெளியிட்டுள்ளன.
ஆந்திர மாநிலத்தை வஞ்சித்துள்ளதாகவும், நாட்டின் கிராமப்புற பொருளாதாரத்தை புறக்கணித்தும், ஏழைகளை
ஒதுக்கித்தள்ளியும். விரைவில் சட்டசபை தேர்தல்களை சந்திக்கவுள்ள மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் அதிகமான நிதியை
ஒதுக்கியுள்ள மத்திய அரசை கண்டித்து நடைபெறும் இந்த கடையடைப்பு போராட்டத்தில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #union budget #tamilnews