லால்குடி அருகே டாஸ்மாக் கடை காவலாளியை கொன்ற 3 பேர் கைது

திருச்சி அருகே டாஸ்மாக் கடை காவலாளியை கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
லால்குடி அருகே டாஸ்மாக் கடை காவலாளியை கொன்ற 3 பேர் கைது
Published on

லால்குடி:

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த பூவாளூர்சிறுகனூர் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு பெருவளநல்லூர் வடக்கு புதுத்தெருவை சேர்ந்த பாலையா(வயது 55) என்பவரை தினக்கூலி அடிப்படையில் அங்குள்ள பணியாளர்கள் காவலாளியாக நியமித்து இருந்தனர். கடந்த 19-ந்தேதி இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடை மூடப்பட்டதும், இரவு 12 மணி வரை கணக்கு பார்த்துவிட்டு டாஸ்மாக் பணியாளர்கள் வீட்டுக்கு சென்றனர். பாலையா வழக்கம்போல் இரவு காவல் பணியில் இருந்தார்.

இந்தநிலையில் கடந்த 20-ந்தேதி அதிகாலை டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச விவசாயிகள் சிலர் சென்றனர். அப்போது, காவலாளி பாலையா தலை, கழுத்து மற்றும் கைகளில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுபற்றி டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் கண்ணனுக்கும், லால்குடி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார் (லால்குடி), ராஜா(சிறுகனூர்) ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் பாலையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பாலையாவை கொன்ற மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 20-ந்தேதி அதிகாலை டாஸ்மாக் கடைக்கு வந்த மர்ம ஆசாமிகள் சிலர் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க முயன்றதும், அதை தடுக்க முயன்ற காவலாளி பாலையாவை அவர்கள் இரும்பு கம்பி மற்றும் சுத்தியலால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பிச்சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர் ரங்கராஜை வரவழைத்து, சம்பவ இடத்தில் கொள்ளையர்கள் விட்டு சென்ற தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் மோப்பநாய் ஸ்பார்க் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் சென்று படுத்துக்கொண்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளிகளை பிடிக்க லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் கொலையில் தொடர்புடைய திருச்சி சிறுகனூர் அருகே நெடுங்கூர் கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன்(22), சந்துரு(18), சவுந்திரராஜன்(18) ஆகிய 3பேரையும் கைது செய்தனர். அவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 20-ந்தேதி நள்ளிரவு டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருட வந்தோம். அப்போது காவலாளி பாலையா எங்களை தடுத்து நிறுத்தினார். மேலும் எங்களை அடையாளம் தெரிந்ததால் போலீசில் சிக்க வைத்துவிடுவார் என்பதால் அவரை , திருடுவதற்கு கொண்டு வந்த இரும்பு கம்பி, சுத்தியலால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டோம். போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர் என்று கூறினர்.

இதனிடையே திருச்சி மாவட்டத்தில் லால்குடி மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அடிக்கடி கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவங்களில் 3 பேரும் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com