

தென்காசி:
புராண, ஆன்மீக இதிகாசங்களில் அகத்திய மாமுனிவருக்கு தனி சிறப்பு உண்டு. இமயமலையில் சிவபெருமானுக்கு திருமணம் நடந்த போது முப்பத்து முக்கோடி தேவர்களும் அங்கு கூடியிருந்தனர். இதனால் பாரம் அதிகரித்து வடபுறம் தாழ்ந்து தென்புறம் உயர்ந்தது. அதனை சமபடுத்த சிவபெருமான் அகத்திய முனிவரை தென்புலம் செல்ல ஆணையிட்டார்.
அப்போது அகத்தியர் தங்கள் திருமணத்தை பார்க்க அடியேனுக்கு வாய்ப்பில்லையா என கவலையுடன் சிவனிடம் கேட்டபோது ஆண்டவன் அதற்கு, நீ தென்புறம் சென்று பூமியை சமபடுத்து. நான் அங்கு வந்து உனக்கு காட்சி தருவேன் என்று கூறி அதேபோல் பொதிகை மலையில் மனக்காட்சி அளித்ததாக புராணங்கள் கூறுகிறது. அந்த தென்புலம் பாபநாசம் பொதிகை மலையாகும். அகஸ்தியர் தன் வந்த பணி முடிந்து திரும்பும் போது இலஞ்சி திருமுருகர் ஆலயத்தில் மண்ணால் சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டதாகவும், அப்போது குற்றால மலையில் உட்பகுதியில் அவர் தங்கியிருந்த இடம் பொதிகையடி என்று கூறுகிறார்கள். ஆண்டுதோறும் வைகாசி மாதம் 3–ம் வெள்ளிக்கிழமை இரவு குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரத்தை சேர்ந்த பக்தர்கள் அங்கு பூஜை செய்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.
இந்த இடம் குற்றாலத்திலிருந்து சுமார் 10 கீ.மீ தூரம் மலையில் உள்ளது. இங்கு அகத்தியர், அத்திரி முனிவர், தேரையர் ஆகியோருக்கு உலகில் மழை குறைவின்றி பெய்திட பிராத்தனை செய்து பூஜை செய்வார்கள். மேலும் இப்பகுதியில் இன்றளவும் சித்தர்கள் வாழ்ந்து அருள்பாலித்து வருவதாகவும் கூறுகிறார்கள். இந்த குறிப்பிட்ட காலத்தில் மட்டும் தான் இங்கு செல்ல முடியும். மற்ற காலங்களில் சென்றால் மிருகங்களின் இடற்பாடுகளினால் செல்ல வாய்ப்பிருக்காது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டும் கடந்த வெள்ளிக்கிழமை பக்தர்கள் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். அப்போது 21 வகையான மூலிகைகளால் அகத்தியருக்கு அபிஷேகம் செய்தனர். பலவகை கனிகள், சித்ரானங்கள் மற்றும் ரொட்டி ரசம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் நடந்தது.