கோவில்பட்டியில் கர்ப்பிணி மனைவியை கழுத்தறுத்து கொன்ற வாலிபர் தற்கொலை முயற்சி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் குடும்ப தகராறு காரணமாக கர்ப்பிணி மனைவியை கழுத்தறுத்து கொன்ற வாலிபர் போலீசுக்கு பயந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மாரியப்பன்-சண்முக பிரியா திருமணத்தின் போது எடுத்துக் கொண்ட படம்.
மாரியப்பன்-சண்முக பிரியா திருமணத்தின் போது எடுத்துக் கொண்ட படம்.
Published on

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சத்திரப்பட்டி மேலத் தெருவை சேர்ந்தவர் மருதையா. இவரது மகன் மாரியப்பன் (வயது30) தச்சு தொழிலாளி. இவருக்கும் புதுக்கிராமத்தை சேர்ந்த ஜெயராஜ் மகள் சண்முக பிரியா (25) என்பவருக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தற்போது சண்முக பிரியா 3 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதே போல் இன்று அதிகாலை கணவன்- மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த மாரியப்பன் கத்தியால் சண்முக பிரியா கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் போலீசுக்கு பயந்த மாரியப்பன் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து பார்த்தனர்.

அப்போது சண்முக பிரியா இறந்த நிலையிலும் மாரியப்பன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதுகுறித்து அவர்கள் நாலாட்டின்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு கோவில்பட்டி துணை சூப்பிரண்டு ஜெபராஜ், இன்ஸ்பெக்டர்கள் ஆவுடையப்பன், முத்து லட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

உயிருக்கு போராடி கொண்டிருந்த மாரியப்பனை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்து கிடந்த சண்முக பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கர்ப்பிணி மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com