

கோத்தகிரி:
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் காமராஜர் சதுக்கம் பகுதியில் 65 சென்ட் பரப்பளவில் நேரு பூங்கா உள்ளது. இங்கு மலர் செடிகள், பல்வேறு ரக ரோஜா மலர்கள், பசுமையான புல்தரைகள் மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவை உள்ளன.
நீலகிரியில் கோடை விழா நடைபெறும் போது, தோட்டக்கலைத் துறை சார்பில் நேரு பூங்காவில் வருடத்திற்கு ஒரு முறை காய்கறி கண்காட்சி 2 நாட்கள் நடைபெறும். அப்போது, காய்கறிகளால் ஆன பறவைகள், விலங்குகள் மற்றும் பல்வேறு விதமான வடிவங்கள் பார்வைக்கு வைக்கப்படும். இதன் காரணமாக நேரு பூங்காவிற்கு தினசரி சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர்.
எனவே சீசன் காலங்களில் மட்டுமின்றி பூங்காவை பராமரிக்கும் பணிகளில் 6 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதத்தில் மழை பெய்ததால் புல்தரையில் புற்கள் அதிக அளவு வளர்ந்து உள்ளது. இதனால் பூக்கள் அழுகிய நிலையில் காணப்பட்டது.
இதனால் பூங்கா ஊழியர்கள் அடர்ந்து வளர்ந்துள்ள புற்களை எந்திரம் மூலம் வெட்டி சீர்படுத்தி வருகின்றனர். மேலும் அழுகிய மலர் நாற்றுகளை அகற்றி விட்டு புதிய நாற்றுகளை நடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பூந்தோட்டத்தில் வளர்ந்துள்ள களை செடிகளை அகற்றி வருகின்றனர். நேரு பூங்கா சீர்படுத்தப்பட்டு வருவதால் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களான நேற்று அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அது போல் அங்குள்ள சிறுவர் பூங்காவில் குழந்தைகள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்.