

திருவட்டார்:
திருவட்டார் காட்டாத்துறையைச் சேர்ந்தவர் ஜெஸ்லின் பிரியா, (வயது 21), பி.எஸ்.சி. நர்சிங் பட்டதாரி. இவர் தற்போது சென்னையில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். தற்போது ஊருக்கு வந்திருந்த ஜெஸ்லின் பிரியா திடீரென மாயமானார்.
இதையடுத்து அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் ஜெஸ்லின் பிரியா கிடைக்கவில்லை. இது குறித்து ஜெஸ்லின் பிரியாவின் தந்தை வின்ஸ்லி திருவட்டார் போலீசில் புகார் செய்தார்.
புகாரில், தனது மகளை அதே பகுதியைச் சேர்ந்த விஜின் (26) என்பவர் கடத்திச் சென்றதாக கூறி உள்ளார். அவரிடமிருந்து தனது மகளை மீட்டுத்தர வேண்டும், விஜின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறி உள்ளார். இது குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் ஜெஸ்லின் பிரியாவும், விஜினும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தது தெரியவந்துள்ளது.
ஜெஸ்லின் பிரியா சென்னைக்கு வேலைக்கு சென்ற பிறகு விஜினும் சென்னைக்கு சென்று அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் சென்னையில் இருந்து ஊருக்கு திரும்பி வந்துள்ளனர். அதன் பிறகுதான் இருவரும் மாயமாகி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.