

புதுடெல்லி:
ஜி.எஸ்.டி அமல்படுத்துவதையொட்டி வரும் 30-ம் தேதி நள்ளிரவில் கூட இருக்கும் பாராளுமன்ற சிறப்புக்கூட்டத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜூலை 1–ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்ற சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படுவதையொட்டி, 30–ந் தேதி இரவு 11 மணிக்கு பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. ஜூன் 30-ம் தேதி நடைபெறும் அறிமுக விழா நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால், ஜி.எஸ்.டி-யின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் என்னவென்று கண்காணிக்க 6 மாத காலம் ஆகும். வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களுக்கு போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தியுள்ள எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பாணர்ஜி வெளிப்படையாகவே தனது முடிவை அறிவித்துவிட்டார். இடதுசாரிகள் உள்ளிட்ட மற்ற கட்சிகளும் புறக்கணிப்பு மனநிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.